ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்; பா.ஜ.க.வின் 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு


ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்; பா.ஜ.க.வின் 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x

58 வேட்பாளர்கள் அடங்கிய இந்த பட்டியலில், முன்னாள் எம்.எல்.ஏ. அஜித் சிங் மேத்தா இடம் பிடித்துள்ளார்.

புதுடெல்லி,

தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 9-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, ராஜஸ்தானில் நவம்பர் 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அடங்கிய 3-வது பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டு உள்ளது. 58 வேட்பாளர்கள் அடங்கிய இந்த பட்டியலில், முன்னாள் எம்.எல்.ஏ. அஜித் சிங் மேத்தா இடம் பிடித்துள்ளார்.

அவர், டோங் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் ஆளும் காங்கிரசை சேர்ந்த நடப்பு எம்.எல்.ஏ.வான சச்சின் பைலட்டுக்கு எதிராக அவர் போட்டியிட உள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.க.வின் யூனுஸ் கானை தோற்கடித்து பைலட் வெற்றி பெற்றார். அப்போது, முந்தின அரசில் இருந்த வசுந்தரா ராஜே மந்திரி சபையில், மந்திரியாக பதவி வகித்தவர் கான். இதேபோன்று, தவுசா தொகுதியில் சங்கர் லால் சர்மா மீண்டும் போட்டியிடுகிறார்.

கடந்த தேர்தலில், காங்கிரசின் முரளி லால் மீனாவிடம் 48,056 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்று போனார். பா.ஜ.க.வின் 2-வது வேட்பாளர் பட்டியலில், முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேவின் பெயர் இடம் பெற்றிருந்தது. அவர் ஜலார்பதன் தொகுதியில் இருந்து போட்டியிட உள்ளார். இதேபோன்று, பா.ஜ.க. மூத்த தலைவர் ராஜேந்திர ரத்தோர், தாராநகர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.


Next Story