ராஜஸ்தான் அரசியல் குழப்பம்: அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - சோனியா காந்தியிடம் பரிந்துரை!


ராஜஸ்தான் அரசியல் குழப்பம்: அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - சோனியா காந்தியிடம் பரிந்துரை!
x

ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அஜய் மாக்கன் இன்று சோனியா காந்தியிடம் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

புதுடெல்லி,

அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வானால், ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியிலிருந்து விலகுவார் எனத் தெரிகிறது.

இந்நிலையில், அம்மாநில புதிய முதல் மந்திரி குறித்த சலசலப்பு கிளம்பியுள்ளது.சச்சின் பைலட் முதல் மந்திரியாகும் பட்சத்தில் 90-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யலாம் என்கிறார்கள்.

இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் பொறுப்பாளர் அஜய் மாக்கன் ஆகியோர் முன்னிலையில் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்குத் திட்டமிடப்பட்டிருந்த சட்டமன்றக் கட்சிக் கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள் சம்மதிக்கவில்லை.

இதனை தொடர்ந்து நேற்று டெல்லி திரும்பிய அஜய் மாக்கன், எம்.எல்.ஏ.க்கள் ஒழுக்கம் தவறிவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அஜய் மாக்கன் ஆகியோர் இணைந்து இன்று மாலை கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் ராஜஸ்தான் விவகாரம் குறித்த தங்கள் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:- காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அஜய் மாக்கன் ஏற்பாடு செய்திருந்த காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டத்தில் எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. மாறாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்கள் சிலர், வேறொரு இடத்தில் தனியாக காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் அறிவுரையின் பேரில் தான் இந்த எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அவர்கள் எங்களுடனான கூட்டத்தை நடத்த அனுமதிக்கவில்லை.

இரண்டு மந்திரிகள் உட்பட மூன்று கட்சித் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் காங்கிரஸ் பார்வையாளர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் முதல்-மந்திரி அசோக் கெலாட் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும் பரிந்துரைத்தனர்.

ராஜஸ்தான் மந்திரி சாந்தி தரிவால், சட்டசபையில் காங்கிரஸ் தலைமைக் கொறடா மகேஷ் ஜோஷி, எம்எல்ஏ தர்மேந்திர ரத்தோர் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story