ராஜஸ்தான் தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியை, மாணவி ஓட்டம் - சென்னையில் மீட்பு


ராஜஸ்தான் தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியை, மாணவி ஓட்டம் -  சென்னையில் மீட்பு
x

தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியை, மாணவி காணாமல் போன விவகாரத்தில் இருவரும் சென்னையில் மீட்கப்பட்டனர்.

பிகானிர்,

ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி கடந்த சனிக்கிழமை காணாமல் போயுள்ளார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

மாணவி காணாமல் போன அதே நாளில் ஆசிரியையும் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைத்த மாணவியின் பெற்றோர், தங்களது மகளை அந்த ஆசிரியை கடத்திருப்பதாக குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே ஆசிரியை குடும்பத்தினரும் தங்கள் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து ஆசிரியை மற்றும் மாணவி ஆகியோர் இணைந்து கடந்த 3ஆம் தேதி விடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், நாங்கள் தன்பாலின ஈர்ப்பு உடையவர்கள் எனவும் இருவரும் குடும்பத்தினருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தனர். தங்களை நிம்மதியாக வாழ விட வேண்டும் என கோரிக்கையும் அதில் வைத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் சென்னையில் இருப்பது தெரியவந்தது. அவர்களை சென்னை போலீசார் உதவியுடன் ராஜஸ்தான் போலீசார் மீட்டனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராஜஸ்தானில் இருந்து தப்பி கேரளாவுக்கு சென்றாதாகவும், பின் அங்கிருந்து சென்னை வந்த பிறகு பிடிபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த இருவரிடமும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story