சமூக வலைத்தளங்களில் நடக்கும் கருத்து யுத்தத்தால் அரசியல் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் நடக்கும் கருத்து யுத்தத்தால் அரசியல் நிைலத்தன்மைக்கு அச்சுறுத்தல் எழுந்திருப்பதாக ராஜ்நாத்சிங் கூறினார்.
புதுடெல்லி,
டெல்லியில், தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. அதில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது:-
உள்நாட்டு பாதுகாப்புக்கும், வெளிநாட்டு பாதுகாப்புக்கும் இடையிலான இடைவெளி குறுகி வருகிறது. புதிய பரிமாணங்களில் அச்சுறுத்தல்கள் உருவாகி வருகின்றன.
இணைய தாக்குதல், கருத்து யுத்தம் ஆகியவைதான் அந்த அச்சுறுத்தல்கள். கருத்து யுத்தம், அரசியல் நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கும் ஆபத்து உள்ளது. அதை முறியடிக்க சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து முயற்சிகள் எடுக்க வேண்டும்.
கருத்து யுத்தத்துக்கு சமூக வலைத்தளங்கள்தான் போர்க்களமாக உள்ளன. அங்கு எவ்வளவு போலி செய்திகளும், வெறுப்பு செய்திகளும் கொண்டு வரப்படுகின்றன என்பதற்கு கணக்கே கிடையாது. சமூக வலைத்தளங்களை திட்டமிட்டு பயன்படுத்தி, மக்களின் கருத்துகளை உருவாக்குகிறார்கள்.
உதாரணமாக, தற்போது நடந்து வரும் உக்ரைன்-ரஷியா போரில் சமூக வலைத்தளங்களின் பங்கு அதிகம். இருதரப்பும் தங்கள் பார்வைக்கு ஏற்ப ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டன.
இந்த போரின் விளைவுகள், உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. எரிபொருள் வினியோகத்தில் பாதிப்பு உருவாகி உள்ளது. ரஷியாவும், உக்ரைனும் உலகில் மூன்றில் ஒரு பங்கு கோதுமையையும், பார்லியையும் ஏற்றுமதி செய்து வந்தன.
போருக்கு பிறகு, இந்த பொருட்களின் ஏற்றுமதி நின்று போனதால், சில ஆப்பிரிக்க நாடுகளில் உணவு தட்டுப்பாடு நிலவுகிறது.
முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்கள், இணைய தாக்குதலின் முக்கிய குறியாக உள்ளன.