3 நாள் அரசு முறை பயணமாக இன்று மாலத்தீவு செல்கிறார் ராஜ்நாத் சிங்


3 நாள் அரசு முறை பயணமாக இன்று மாலத்தீவு செல்கிறார் ராஜ்நாத் சிங்
x

கோப்புப்படம்

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று (திங்கட்கிழமை) முதல் 3-ந்தேதி வரை மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது இந்தியா சார்பில் ரோந்து கப்பலை மாலத்தீவுக்கு பரிசாக வழங்குகிறார்.

புதுடெல்லி,

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் அண்டை நாடாகவும். நெருங்கிய நட்பு நாடாகவும் மாலத்தீவு விளங்குகிறது. அங்கு நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அங்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று (திங்கட்கிழமை) புறப்பட்டு செல்லும் அவர், 3-ந்தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

மாலத்தீவு அதிபருடன் சந்திப்பு

இதில் முக்கியமாக அந்த நாட்டு அதிபர் இப்ராகிம் முகமது சொலியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசுகிறார். இதைப்போல மாலத்தீவு வெளியுறவு மந்திரி அப்துல்லா சாகித், ராணுவ மந்திரி மரியா திதி ஆகியோரையும் சந்திக்கிறார்.

இந்த சந்திப்புகளின்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடக்கிறது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும் என ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ராஜ்நாத் சிங்கின் இந்த பயணத்தின்போது மாலத்தீவு தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு ஒரு அதிவேக ரோந்துக் கப்பல் மற்றும் தரையிறங்கும் வாகனத்தை இந்தியா சார்பில் பரிசாக வழங்குகிறார். நட்பு நாடுகள் மற்றும் பிராந்திய பங்குதாரர்களின் திறனை வளர்க்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டின்படி இந்த தளவாடங்கள் வழங்கப்படுகின்றன.

முக்கியமான மைல்கல்

மாலத்தீவுக்கு ராஜ்நாத் சிங் மேற்கொள்ளும் இந்த பயணத்தை முக்கியமான மைல்கல் என ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஆகஸ்டு மாதம் மாலத்தீவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அப்போது இந்தியா உதவியுடன் நடைபெறும் மாலி இணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் மாலிக்கும், அருகில் உள்ள தீவுக்கூட்டங்களுக்கும் இடையே 6.75 கி.மீ. தூரத்துக்கு பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை' திட்டத்தில் அதிகமாக பயன்பெறும் நாடாக மாலத்தீவு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story