மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: சிவசேனா வேட்பாளரை வீழ்த்தி பா.ஜனதா 3 இடங்களில் வெற்றி


மாநிலங்களவை எம்.பி. தேர்தல்:  சிவசேனா வேட்பாளரை வீழ்த்தி பா.ஜனதா 3 இடங்களில் வெற்றி
x

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் சிவசேனா வேட்பாளரை வீழ்த்தி 3 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது. ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் கிடைத்தன.

மராட்டியத்தில் இருந்து 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

7 பேர் போட்டி

இந்த தோ்தலில் சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத், சஞ்சய் பவாரும், காங்கிரஸ் சார்பில் இம்ரான் பிரதாப்கார்கி, தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் படேல் போட்டியிட்டனர்.

பா.ஜனதா மத்திய மந்திரி பியூஷ் கோயல், அனில்போன்டே, தனஞ்செய் மகாதிக் ஆகியோரை வேட்பாளர்களாக நிறுத்தியது. 6 பேரை தேர்வு செய்ய நடைபெறும் தேர்தலில் 7 பேர் போட்டியிட்டனர்.

இதில் 5 பேர் வெற்றி பெறுவது உறுதியான நிலையில், 6-வது இடத்துக்கு சிவசேனாவின் சஞ்சய் பவார், பா.ஜனதாவின் தனஞ்மகாதிக் ஆகியோரில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. மேலும் அந்த இடத்தை கைப்பற்ற சிவசேனா மற்றும் பா.ஜனதாவுக்கு சுயேச்சை, சிறிய கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்பட்டது.

பலப்பரீட்சை

இதனால் பா.ஜனதா தனது ஒரு வேட்பாளரை திரும்ப பெற வேண்டும் என ஆளுங்கட்சிகள் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் ஏற்க மறுத்து விட்டார். இதன் காரணமாக மராட்டிய சட்டசபையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் வாக்குப்பதிவு உறுதியானது.

ஆளுங்கட்சிகள், பா.ஜனதாவினர் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற யூகங்கள் வகுத்தனர். இதனால் ஏற்பட்ட பலப்பரீட்சையால் கடந்த சில நாட்களாக மராட்டிய அரசியலில் பரபரப்பு நிலவியது. குதிரை பேரத்தை தவிர்க்க சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மும்பை ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

285 வாக்குகள் பதிவு

இந்த பரபரப்பான சூழலில் நேற்று 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தோ்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணிக்கு முடிந்தது. இதில் 288 பேரில் 285 எம்.எல்.ஏ.கள் வாக்கை பதிவு செய்தனர்.

அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களான மந்திரி நவாப் மாலிக், முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் ஆகியோரால் வாக்களிக்க முடியவில்லை. அந்தேரி தொகுதி ரமேஷ் லட்கே உயிரிழந்ததால் அந்த இடம் காலியாக உள்ளது.

விதிமீறல் புகார்

இதையடுத்து மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருந்தது. ஆனால் சிவசேனா எம்.எல்.ஏ. சுகாஸ் காண்டே, காங்கிரஸ் மந்திரி யஷோமதி தாக்குர், தேசியவாத காங்கிரஸ் மந்திரி ஜித்தேந்திர அவாத் வாக்களித்த போது விதிகளை மீறியதாக பா.ஜனதா ஆட்சேபனை தெரிவித்தது. யஷோமதி தாக்குர், ஜித்தேந்திர அவாத் ஆகியோர் தங்களின் வாக்குசீட்டை ஏஜெண்டிடம் காண்பிப்பதற்கு பதிலாக ஏஜெண்ட் கையில் கொடுத்ததாகவும், சுகாஸ் காண்டே மற்ற கட்சி ஏஜெண்டுகளுக்கும் தெரியும் வகையில் வாக்கு சீட்டை காண்பித்ததாக பா.ஜனதா புகார் அளித்தது. மேற்கண்ட 3 வாக்குகளையும் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதேபோல பா.ஜனதா முன்னாள் மந்திரி சுதீர் முங்கண்டிவாரின் வாக்கும் செல்லாது என அறிவிக்க கோரி காங்கிரசும் புகார் செய்து இருந்தது.

செல்லாத ஓட்டு

இந்த புகார்கள் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை. ஓட்டுகள் எண்ணுவது நிறுத்தி வைக்கப்பட்டது. நீண்ட பரிசீலனைக்கு பிறகு தேர்தல் ஆணையம் சிவசேனா எம்.எல்.ஏ. சுகாஸ் காண்டே விதிமுறையை மீறியதாக கூறி அவரது ஓட்டை செல்லாது என அறிவித்தது.

இந்த நிலையில் 8 மணி நேர தாமதத்துக்கு பிறகு நேற்று அதிகாலை 1 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

பா.ஜனதா அமோகம்

முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்ட மத்திய மந்திரி பியூஷ் கோயல், அனில் போன்டே ஆகியோர் தலா 48 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர். இதேபோல தேசியவாத காங்கிரசின் பிரபுல் படேல் 43, காங்கிரஸ் இம்ரான் பிரதாப்கார்கி 44, சிவசேனாவின் சஞ்சய் ராவத் 41 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்தனர்.

அதே நேரத்தில் பா.ஜனதா தனஞ்செய் மகாதிக், சிவசேனாவின் சஞ்சய் பவாருக்கு வெற்றிக்கு தேவையான 41 வாக்குகள் கிடைக்கவில்லை. அவர்கள் முறையே 26, 33 வாக்குகள் பெற்று இருந்தனர். இதையடுத்து 2-வது முன்னுரிமை வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது பா.ஜனதாவின் தனஞ்செய் மகாதிக் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு 12 சுயேச்சை, சிறிய கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு கிடைத்தது. இதன் காரணமாக அவர் சிவசேனா வேட்பாளரை விட அதிக வாக்குகளை பெற முடிந்தது.

இதன் மூலம் போட்டியிட்ட 3 இடங்களிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது. சிவசேனாவின் 2-வது வேட்பாளர் சஞ்சய் பவார் தோல்வியை தழுவினார்.

வெற்றி எப்படி?

பொதுவாக இதுபோன்ற தேர்தலில் ஆளும் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு தான் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவு அதிகமாக இருக்கும். காரணம், மாநில அரசிடம் இருந்து தங்களது தொகுதிக்கு கூடுதல் நிதி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆதரவு அளிப்பார்கள். ஆனால், இந்த தேர்தலில் எதிர்க்கட்சியான பா.ஜனதாவுக்கு அதிகளவில் சுயேச்சைகள் ஆதரவு அளித்து உள்ளனர்.

அதாவது பா.ஜனதாவின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் பலம் 106 ஆகும். ஆனால் பா.ஜனதாவுக்கு தனது சொந்த பலத்தை விட அதிக வாக்குகள் கிடைத்தன. இதில் 8 முதல் 9 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கூட்டணிக்கு ஆதரவான சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என்பது தெரியவந்தது. ஆளும் கூட்டணி ஆதரவு எம்.எல்.ஏ.க்களை எதிர்க்கட்சியான பா.ஜனதா தனவசப்படுத்தி தேர்தலில் வெற்றி வாகை சூடியது மராட்டிய அரசியல் அரங்கை அதிர உள்ளது.


Next Story