அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரம் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு


அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரம் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு
x

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரம் நடைபெறும் என கோவில் அறக்கட்டளை பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

ராமர் கோவில் குடமுழுக்கு

உத்தரபிரதேச மாநிலத்தில், ராமர் பிறந்ததாக கருதப்படும் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலின் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

'அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா, அடுத்த ஆண்டு ஜனவரி 3-வது வாரத்தில் நடைபெறும். இதற்காக ஜனவரி 21, 22, 23 ஆகிய 3 தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடிக்கு அழைப்பு

குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்படி அழைப்பு விடுப்போம். மேலும் பல முக்கிய சாதுக்களும், பிரபலங்களும் குடமுழுக்கில் பங்கேற்பார்கள். இதன் பிரதான நிகழ்வு, அரசியல் சாராததாக இருக்கும். குடமுழுக்கில் பங்கேற்க விருப்பமுள்ள அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். மேடை நிகழ்வோ அல்லது எந்த பொதுக்கூட்டமோ இருக்காது.

25 ஆயிரம் துறவிகள்

நாடு முழுவதும் உள்ள 136 சானதான பாரம்பரியங்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் இந்து மத துறவிகளை அழைக்க ராமர் கோவில் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. அந்த துறவிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களுக்கு அறக்கட்டளை தலைவரின் கையெழுத்துடன் அழைப்பு கடிதம் அனுப்பப்படும். ராமர் கோவில் வளாகத்தில் குடமுழுக்கு நிகழ்வில் பங்கேற்கும் சுமார் 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களில் இருந்து இந்த 25 ஆயிரம் துறவிகள் தனியானவர்கள்.'

இவ்வாறு அவர் கூறினார்.

முடிவடையும் தருவாயில் கருவறை

'ராமர் கோவில் கருவறை கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 'பிராண பிரதிஷ்டை' என்ற பெருநிகழ்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

குடமுழுக்கு விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு சுமார் ஒரு மாத காலத்துக்கு அன்னதானம் வழங்க கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. ஜனவரி மாதம் முழுவதும் தினமும் 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்' என கோவில் அறக்கட்டளை உறுப்பினரான அனில் மிஸ்ரா கூறினார்.


Next Story