ராமர் கோவில் கும்பாபிஷேக விழா; அழைப்பிதழில் இடம் பெற்ற சிறப்பம்சங்கள் விவரம்...!!


ராமர் கோவில் கும்பாபிஷேக விழா; அழைப்பிதழில் இடம் பெற்ற சிறப்பம்சங்கள் விவரம்...!!
x

முக்கிய அழைப்பிதழ் அட்டையின் முகப்பு பகுதியில் ராமர் கோவிலின் அழகிய நிழல் உருவ படம் இடம் பெற்றிருப்பதுடன், அதற்கு கீழே ஸ்ரீராம் தம் மற்றும் அதற்கும் கீழே அயோத்தி என்றும் பதிப்பிக்கப்பட்டு உள்ளது.

அயோத்தி,

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜை நடத்தி வைத்து, அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கோவில் எழுப்பும் பணிகள் நடைபெற்றன.

கடந்த அக்டோபரில், கோவிலின் தரை பகுதியில் விலையுயர்ந்த கற்களை கொண்டு பதித்து, அழகுப்படுத்திய பணிகள் அடங்கிய புகைப்படங்கள் பகிரப்பட்டு இருந்தன. இந்த சூழலில், ராமர் கோவிலின் உட்புறம் செதுக்கப்பட்ட அழகிய சிற்பங்கள் அடங்கிய புகைப்படங்களை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கடந்த டிசம்பரில் வெளியிட்டு இருந்தது.

ராமர் கோவிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 4 ஆயிரம் சாமியார்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் வருகிற ஜனவரி 15-க்குள் நிறைவடைந்து விடும். அதன்பின் ஜனவரி 16-ந்தேதி பிரான் பிரதிஷ்தா (சிலை பிரதிஷ்டை) பூஜை தொடங்கி, தொடர்ந்து 22-ந்தேதி வரை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு பாரம்பரியங்களை சேர்ந்த 13 அகாராக்களின் 150 துறவிகள் மற்றும் சாமியார்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதுதவிர, 2,200 விருந்தினர்களுக்கு அழைப்பு விடப்பட்டு இருக்கிறது. காசி விஸ்வநாத், வைஷ்ணவதேவி போன்ற பெரிய கோவில்களின் தலைவர்கள், மதம் மற்றும் அரசியலமைப்பு மையங்களின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு உள்ளனர்.

புத்த மத தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அருண் கோவில், நடிகை மாதுரி தீட்சித், திரை இயக்குநர் மதுர் பண்டார்கர், முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வசுதேவ காமத், இஸ்ரோ இயக்குநர் நிலேஷ் தேசாய் மற்றும் பிற பிரபலங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர்.

விருந்தினர்கள் தங்குவதற்காக அயோத்தியில் 3-க்கும் மேற்பட்ட இடங்களில் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 600 அறைகள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன. ஜனவரி 23-ந்தேதியில் இருந்து கடவுள் ராமரை மக்கள் தரிசனம் செய்யலாம். வடஇந்திய பாரம்பரியத்தின்படி, ஜனவரி 24-ந்தேதி முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடத்தப்படும் என்று ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொது செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார்.

ராமர் கோவில் வளாகம் பாரம்பரிய நகர முறைப்படி கட்டப்பட்டு உள்ளது. அது கிழக்கு மேற்கு திசையில் 380 அடி நீளமும், 250 அடி அகலமும் மற்றும் 161 அடி உயரமும் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தரைப்பகுதியும் 20 அடி உயரம் கொண்டது. மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 நுழைவாயில்களையும் கோவில் கொண்டுள்ளது.

ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ்கள் தயாராகி விட்டன. இதில் குறிப்பிடும்படியாக பல்வேறு விசயங்கள் காணப்படுகின்றன.

இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு வேறு மொழிகளில் அச்சடிக்கப்பட்டு உள்ள அழைப்பிதழ் தொகுப்பு ஒவ்வொன்றிலும், முக்கிய அழைப்பிதழ் அட்டை, கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான அட்டை மற்றும் ராமஜென்ம பூமி இயக்கத்தின் பயணம் மற்றும் அதில் நேரடியாக அல்லது மறைமுகம் ஆக பங்காற்றியவர்களை பற்றிய தொகுப்பு புத்தகம் ஆகியவை அடங்கியுள்ளன.

முக்கிய அழைப்பிதழ் அட்டையின் முகப்பு பகுதியில் ராமர் கோவிலின் அழகிய நிழல் உருவ படம் இடம் பெற்றிருப்பதுடன், அதற்கு கீழே ஸ்ரீராம் தம் மற்றும் அதற்கும் கீழே அயோத்தி என்றும் பதிப்பிக்கப்பட்டு உள்ளது.

கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான அட்டையில் கோவிலின் உருவ படம் ஒன்றும், அதற்கு கீழே, சிறப்பான நிகழ்ச்சி என்ற தலைப்பும் இடம் பெற்றுள்ளது. அதில், கும்பாபிஷேகத்திற்கான நேரம் 12.20 என்றும், கும்பாபிஷேகத்திற்கான தினம் 2024-ம் ஆண்டு ஜனவரி 22, திங்கட்கிழமை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சி அட்டையின் உள்ளே, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அதனுடன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் கோவில் அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிரிதிய கோபால் தாஸ் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

பிரபல தொலைக்காட்சி தொடரான ராமாயணத்தில், கடவுள்களான ராமர் மற்றும் சீதை வேடங்களை ஏற்று நடித்த அருண் கோவில் மற்றும் தீபிகா சிக்லியா ஆகியோரும் அழைக்கப்பட்டு உள்ளனர். நாடு முழுவதிலும் இருந்து 4 ஆயிரம் சாமியார்களும் அழைக்கப்பட்டு உள்ளனர்.

ராமர் கோவிலுக்கான இயக்கத்தின்போது உயிரிழந்த 50 கரசேவகர்களின் குடும்பத்தினரும் அழைக்கப்பட்டு உள்ளனர். நீதிபதிகள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களுக்கும் முறையே தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.

முக்கிய அழைப்பிதழ் அட்டையின் உட்புறம் கோவிலின் தோற்றங்கள், குழந்தை வடிவ ராமரின் தோற்றங்கள் மற்றும் அரச குடும்ப அணிகலன்களை அணிந்து தாமரை மீது ஒரு கையில் வில் மற்றும் மற்றொரு கையில் அம்பு ஏந்தியபடியும், தலைமுடியை சீராக அரச முறைப்படி வாரி, தெய்வீக முகத்துடன் கூடிய சிலையின் கிராபிக் வடிவமும் இடம் பெற்றுள்ளன.

அடுத்த பக்கத்தில் நிகழ்ச்சியின் தேதி, பிற விவரங்களும், அடுத்த பக்கத்தில், கோவில் கட்டுவதற்காக நடந்த போராட்டங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளன. சாமியார் தேவ்ரஹா பாபா ஜி மகராஜ், மஹந்த் அபிராம தாஸ், பரமஹன்ஸ ராமசந்திரதாஸ் உள்ளிட்டோரின் வரைபடங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

அதனுடன், 1949-50-ம் ஆண்டில் அப்போது பைசாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக இருந்த கே.கே. நய்யார், தாக்குர் குருதத் சிங்: ராஜேந்திர சிங் ரஜ்ஜூ பய்யா மற்றும் பின்னாளில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவரான அசோக் சிங்கால் ஆகியோரின் தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.


Next Story