ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரம்


ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரம்
x

ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு அயோத்தியில் உள்கட்டமைப்பு பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

லக்னோ,

அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் மிக நீண்ட போராட்டங்களுக்குப்பிறகு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி அயோத்தி நகர் முழுவதும் உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

உள்கட்டமைப்பு பணிகள்

ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு அயோத்தியில் நடந்து வரும் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

அந்தவகையில் சகாதத்கஞ்சில் இருந்து நயா காட் செல்லும் 13 கி.மீ. நீள ராம பாதைப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

ராம்ஜானகி பாதை, பக்தி பாைத போன்றவற்றுக்கான செயல்திட்டம் தயாராகி விட்டது. ராமஜென்ம பூமி பாதை 30 மீட்டரும், பக்தி பாதை 14 மீட்டரும் அகலம் கொண்டவை.

விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

சாலை வசதிகள்

ராமஜென்ம பூமி மற்றும் அனுமன்ஹார்கி கோவில் செல்லும் பக்தர்கள் எளிதில் சென்று வருவதற்கு சாைல வசதிகள் முக்கியமானது என்பதால் அந்த பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

பிரமாண்டமான கோவில் மற்றும் அதற்கான வசதிகளுக்காக அயோத்தி நகரின் இந்த விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு வியாபாரிகள் எத்தகைய தயக்கமும் இன்றி தங்கள் கடைகள் இருக்கும் இடத்தை வழங்கி வருகின்றனர்.

யோகி ஆதித்யநாத் ஆய்வு

இதற்காக வழங்கப்படும் இழப்பீடு தொகை தொடர்பாக புகார்கள் எதுவும் இல்லை. அயோத்தி நகர விரிவாக்க பணிகளுக்காக அப்புறப்படுத்தப்படும் வியாபாரிகளுக்கு புதிய வணிக வளாகங்களில் கடைகள் ஒதுக்கப்படும்.

ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக ஏராளமான கடைகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் இந்த மேம்பாட்டு பணிகளை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story