பலாத்காரம்... 3 ஆண்டுகளுக்கு பின் விரட்டி, விரட்டி இளம்பெண் படுகொலை; உ.பி.யில் கொடூரம்


பலாத்காரம்... 3 ஆண்டுகளுக்கு பின் விரட்டி, விரட்டி இளம்பெண் படுகொலை; உ.பி.யில் கொடூரம்
x
தினத்தந்தி 21 Nov 2023 6:45 PM IST (Updated: 21 Nov 2023 6:53 PM IST)
t-max-icont-min-icon

3 ஆண்டுகளுக்கு முன், மைனராக இருந்த அந்த பெண்ணை பவன் நிஷாத் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

கவுசாம்பி,

உத்தர பிரதேசத்தில் கவுசாம்பி மாவட்டத்தில் வசித்து வந்த 19 வயது இளம்பெண் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

3 ஆண்டுகளுக்கு முன், மைனராக இருந்த அந்த பெண்ணை பவன் நிஷாத் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி போலீசில் புகார் அளித்ததும், வழக்கை திரும்ப பெறும்படி, அந்த பெண்ணை பவன் மற்றும் கூட்டாளிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

பவனின் சகோதரரான அஷோக் நிசாத் என்பவர் மற்றொரு கொலை வழக்கில் குற்றவாளியாவார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் அஷோக் விடுதலையாகி வெளியே வந்துள்ளார். பவனும் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இருவரும் சேர்ந்து அந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து, வழக்கை முடிக்கும்படி வலியுறுத்த முடிவு செய்தனர். எனினும், அந்த பெண் இதற்கு மறுத்து விட்டார்.

இந்நிலையில், வயலில் கால்நடைகளை மேய்த்து விட்டு வீட்டுக்கு திரும்பியபோது, அந்த பெண்ணை, பவன் மற்றும் அஷோக் என இருவரும் மறித்து, கோடாரி கொண்டு கடுமையாக தாக்கினர்.

கிராம மக்கள் பலர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தின்போது, அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதன்பின் 2 பேரும் தப்பியோடி விட்டனர்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர் என போலீஸ் சூப்பிரெண்டு பிரிஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

பெண்களை துன்புறுத்தினாலோ அல்லது அவர்களுக்கு தீங்கு ஏற்படுத்தினாலோ சரியான பதிலடி கொடுக்கப்படும் என முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரண்டு மாதங்களுக்கு முன் கூறினார். இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.


Next Story