இளம்பெண் கூட்டு பலாத்காரம்; காதலன் உள்பட 2 பேர் கைது


இளம்பெண் கூட்டு பலாத்காரம்; காதலன் உள்பட 2 பேர் கைது
x

பெங்களூருவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த காதலன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூருவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணை கூட்டாக பலாத்காரம் செய்த காதலன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளம்பெண்ணுடன் காதல்

துமகூரு மாவட்டம் கொரட்டகெரேயில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கும், பெங்களூரு கிரிநகரில் வசிக்கும் புருஷோத்தம் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இளம்பெண்ணை காதலிப்பதாக புருஷோத்தம் கூறியுள்ளார். இந்த காதலை இளம்பெண்ணும் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து, 2 பேரும் காதலித்து வந்ததுடன், செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். புருஷோத்தம் கிரிநகரில் தங்கி உணவு விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார்.

சமீபத்தில் இளம்பெண்ணை பார்க்க புருஷோத்தம் துமகூருவுக்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்வது குறித்தும் பேசியுள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் இளம்பெண் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை சில நாட்கள் பயன்படுத்திவிட்டு கொடுப்பதாக கூறி புருஷோத்தம் வாங்கி கொண்டு பெங்களூருவுக்கு வந்து விட்டார். தனது செல்போனை கொடுக்கும்படி இளம்பெண் கேட்டு வந்துள்ளார்.

கூட்டாக கற்பழிப்பு

ஆனால் தன்னால் துமகூருவுக்கு வர முடியாது என்றும், பெங்களூருவுக்கு வந்து செல்போனை வாங்கி கொள்ளும்படியும் புருஷோத்தம் கூறி உள்ளார். அதன்படி, அந்த பெண்ணும் பெங்களூருவுக்கு வந்துள்ளார். கிரிநகரில் உள்ள தன்னுடைய நண்பர் சேத்தன் வீட்டுக்கு இளம்பெண்ணை புருஷோத்தம் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இளம்பெண்ணுடன் புருஷோத்தம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து இளம்பெண்ணுக்கு, புருஷோத்தம் கொடுத்துள்ளார். அந்த குளிர்பானத்தை வாங்கி குடித்த இளம்பெண் மயக்கம் அடைந்துள்ளார். இந்த நிலையில், இளம்பெண்ணை முதலில் புருஷோத்தம் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, சேத்தனும் இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. அந்த சந்தர்ப்பத்தில் இளம்பெண் மயக்கம் தெளிந்து எழுந்துள்ளார்.

காதலன் கைது

மேலும் சேத்தன் வீட்டுக்குள் இருந்து இளம்பெண் வெளியே ஓடிவந்து கூச்சலிட்டார். இதனால் புருஷோத்தமும், சேத்தனும் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். இந்த சம்பவம் குறித்து கிரிநகர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தலைமறைவான புருஷோத்தம், சேத்தனை தேடிவந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த புருஷோத்தம், சேத்தனை கிரிநகர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story