பலாத்காரம், கொலை... சிறுமியின் புகைப்படம் வெளியிட்ட வழக்கு; ராகுல் காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி


பலாத்காரம், கொலை... சிறுமியின் புகைப்படம் வெளியிட்ட வழக்கு; ராகுல் காந்திக்கு எதிரான மனு தள்ளுபடி
x

ராகுல் காந்தி சார்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்தி அளிக்கிறது என்று கூறி அவருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என கோரிய மத்லேகரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2021-ம் ஆண்டு சர்ச்சைக்குரிய எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவொன்றை வெளியிட்டார். அதில், சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பெற்றோருடன் சிறுமி இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை ராகுல் காந்தி பகிர்ந்திருக்கிறார்.

அதன்பின்னர் அந்த எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவை நீக்கி விட்டார். எனினும், சமூக ஆர்வலர் மகரந்த் சுரேஷ் மத்லேகர் என்பவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளம் வெளியே தெரியும் வகையில் புகைப்படம் வெளியிட்டதற்காக ராகுல் காந்திக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என கோரி 2021-ம் ஆண்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், டெல்லி போலீசார் கோர்ட்டில் அளித்த பதிலில், சமூக ஊடக பதிவில், பலாத்கார பாதிப்புக்கு ஆளான சிறுமியின் அடையாளங்களை வெளியிட்டதற்காக ராகுல் காந்திக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தது.

பலாத்கார பாதிப்புக்கு ஆளான நபரின் அடையாளங்களை வெளியிடுவது என்பது, இந்திய தண்டனை சட்டத்தின் 228ஏ பிரிவின் கீழ் ஒரு குற்றம் ஆகும். இதற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை விதிக்கப்பட கூடும்.

இந்த சூழலில், டெல்லி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பி.எஸ். அரோரா ஆகியோர் கொண்ட அமர்வு முன் ஆஜரான ராகுல் காந்தியின் வழக்கறிஞர், கோர்ட்டில் இன்று கூறும்போது, அந்த பதிவை ராகுல் காந்தி நீக்கி விட்டார். அதனை அவரே அழித்து விட்டார் என தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்று கொண்ட டெல்லி ஐகோர்ட்டு, ராகுல் காந்தி சார்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் திருப்தி அளிக்கிறது என்று கூறி அவருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என கோரிய மத்லேகரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.


Next Story