பெங்களூருவில் புதிய தொழில்நுட்பத்தில் 'ரேபிட் ரோடு'
பெங்களூருவில் புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ரேபிட் ரோட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.
பெங்களூரு:
பெங்களூருவில் புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ரேபிட் ரோட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.
ரேபிட் ரோடு
பெங்களூரு சி.வி.ராமன் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பழைய மெட்ராஸ் சாலையில் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் சிலாப்புகள் மூலம் 'ரேபிட் ரோடு' நிறுவப்பட்டுள்ளது. இந்த சாலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு ரேபிட் ரோட்டை திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூருவில் சாலைகளை அமைக்கும்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். கான்கிரீட் சாலையை அமைக்க அதிக நாட்கள் ஆகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு முறை கான்கிரீட் சாலை அமைத்துவிட்டால், வேறு ஏதாவது பணிகளுக்காக மீண்டும் அதை உடைத்து அகற்றுவது பெரும் சவாலான விஷயமாக உள்ளது.
புதிய தொழில்நுட்பம்
இந்த பிரச்சினை வராமல் இருக்க புதிய தொழில்நுட்பத்துடன் ரேபிட் ரோடு என்ற முறை வந்துள்ளது. இந்த திட்டம் பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 500 மீட்டர் தூரத்திற்கு இந்த சாலையை அமைத்துள்ளோம். இந்த திட்டத்தில் முன்கூட்டியே கான்கிரீட் சிலாப்புகளை தயாரித்து அதை எடுத்து வந்து வைத்து சாலை அமைக்கப்படுகிறது.
இந்த சாலை பணிகளை நேரில் ஆய்வு செய்ய நான் இங்கு வந்தேன். பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளேன். 20 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள வாகனங்கள் இந்த சாலையில் அடிக்கடி செல்ல வேண்டும். அப்போது சாலைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா? என்பதை கவனிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கனரக வாகனங்கள் அந்த ரோட்டை பயன்படுத்திய பிறகு அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படி கூறியுள்ளேன்.
திட்ட செலவு
இந்த திட்டத்தின்படி பணிகள் விரைவாக நடைபெற வேண்டும், தரமாக இருக்க வேண்டும், செலவு குறைவாக இருக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் ஆகும். இதற்கான திட்ட செலவு குறைவாக இருந்தால், அடுத்த எந்தெந்த சாலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து முடிவு செய்து பணிகள் தொடங்கப்படும். செலவு குறைவாக இருந்தால் மட்டுமே இந்த திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்துவது குறித்து ஆலோசிப்போம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.