திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழாவருகிற 28-ந்தேதி நடக்கிறது


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழாவருகிற 28-ந்தேதி நடக்கிறது
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 28-ந் தேதி ரத சப்தமி விழா நடக்கிறது.

திருமலை,

சூரிய ஜெயந்தியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. இது, திருமலையில் நடக்கும் மினி பிரம்மோற்சவ விழா என்றும் அழைக்கப்படுகிறது. அன்று ஒரேநாளில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரங்களில் 7 வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த வாகன சேவையை வழிபடும் பக்தர்களுக்கு வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின்போது நடக்கும் வாகன சேவையை வழிபடும் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

அதன்படி 28-ந்தேதி அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது. சூரியன் உதயமாகும் காலை 6.45 மணியளவில் கோவிலின் பிரதான வாசலில் சூரிய ஜெயந்தி உற்சவம் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து காலை 10 மணி வரை சிறிய சேஷ வாகன வீதிஉலா, காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கருட வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மதியம் 2 மணியில் இருந்து மாலை 3 மணி வரை சக்கர ஸ்நானம் நடக்கிறது.

மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதி உலா, மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலா, இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.

ரத சப்தமியையொட்டி 28-ந்தேதி நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Next Story