பஜாஜ் பைனான்சின் முக்கிய கடன் திட்டங்களை முடக்கிய ரிசர்வ் வங்கி: வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?


பஜாஜ் பைனான்சின் முக்கிய கடன் திட்டங்களை முடக்கிய ரிசர்வ் வங்கி: வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பா?
x

ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்பட்டு, மீண்டும் அனுமதி கோரப்படும் என்று பஜாஜ் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் பைனான்ஸ், ஆன்லைன் மூலம் விரைவாக கடன் மற்றும் கடன் அட்டைகள் பெறும் திட்டங்களை பெரிய அளவில் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பஜாஸ் பைனான்சின் இன்ஸ்டா இ.எம்.ஐ. கார்டு (Insta EMI Card) மற்றும் இ காம் (eCOM) ஆகிய இரண்டு ஆன்லைன் கடன் திட்டங்களின் கீழ் புதிதாக கடன் வழங்க, ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

டிஜிட்டல் கடன் விதிமுறைகளை மீறியதால், குறிப்பாக கடன் வாங்குபவர்களுக்கு இத்திட்டங்கள் பற்றிய முழு விபரங்கள் அடங்கிய தகவல் அறிக்கையை வழங்க தவறியதற்காகவும், பிற டிஜிட்டல் கடன்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களில் உள்ள குறைபாடுகள் காரணமாகவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்த குறைபாடுகளை சரி செய்த பிறகு, மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், அதில் திருப்தி இருந்தால் தடையை நீக்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இத்திட்டங்களில் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்பட்டு, மீண்டும் இவற்றை செயல்படுத்த ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரப்படும் என்று பஜாஜ் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டா இ.எம்.ஐ. கார்டு திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு கட்டணமின்றி இன்ஸ்டா இ.எம்.ஐ. அட்டை வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் 4,000க்கும் அதிகமான விற்பனையகங்களில், 2 லட்சம் ரூபாய் வரை கடன்களுக்கு பொருட்களை வாங்க முடியும். கடன் தொகையை மாதாந்திர தவணை முறையில் திருப்பி செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமும் இதே முறையில் பொருட்களை வாங்க முடியும்.

இ காம் திட்டத்தில், ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்களுக்கு கடன் அளிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களை பாதிக்குமா?

ரிசர்வ் வங்கியின் தடை உத்தரவு வாடிக்கையாளர்களை பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பஜாஜ் பைனான்ஸ் விளக்கம் அளித்துள்ளது. இ காம் மற்றும் இன்ஸ்டா இஎம்ஐ கார்டு ஆகிய திட்டங்களின்கீழ் புதிய கடன்களை அனுமதிப்பதையும், கடன் தொகையை விநியோகம் செய்வதையும் ரிசர்வ் வங்கி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என பஜாஜ் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.

இதன் பொருள் என்னவென்றால், ஏற்கனவே கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியின் தடை உத்தரவால் பாதிக்கப்பட மாட்டார்கள். புதிய கடன் மற்றும் கடன் தொகை விநியோகம் மட்டுமே தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

நுகர்வோர் கடன்களுக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியதால் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. இதன் தாக்கம் பங்குச்சந்தையில் இன்று எதிரொலித்தது. வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.

குறிப்பாக எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் எச்டிஎப்சி வங்கி போன்ற முன்னணி வங்கிகளின் பங்குகள் 0.2 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை சரிந்தது. பிற்பகல் நிலவரப்படி பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் 2.12 சதவீதம் சரிந்து, பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.7,210 ஆக வர்த்தகம் ஆனது குறிப்பிடத்தக்கது.


Next Story