26-ந் தேதி 'ஜி-20' மாநாட்டு வளாகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!


26-ந் தேதி ஜி-20 மாநாட்டு வளாகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!
x

டெல்லியில் மறுவடிவமைக்கப்பட்ட ‘ஜி-20’ மாநாட்டு வளாகத்தை பிரதமர் மோடி 26-ந் தேதி திறந்து வைக்க உள்ளார்.

புதுடெல்லி,

'ஜி-20' அமைப்பு கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் இந்தியா அமெரிக்கா, ரஷியா, சீனா உள்பட 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் மாறுகிறது. அந்த வகையில் 'ஜி-20' அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. அதன்படி 'ஜி-20' தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை வருகிற செப்டம்பர் மாதம் இந்தியா நடத்துகிறது. இதையொட்டி நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் 'ஜி-20' தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மறுவடிவமைக்கப்பட்ட மாநாட்டு வளாகம்

இந்த நிலையில் டெல்லியில் செப்டம்பர் மாதம் நடக்கும் 'ஜி-20' உச்சி மாநாட்டுக்காக மறுவடிவமைக்கப்பட்ட இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ஐடிபிஓ) வளாகத்தை பிரதமர் நரேந்திரே மோடி வருகிற 26-ந் தேதி திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரகதி மைதான வளாகம் என்றும் அழைக்கப்படும் இந்த இடம், சுமார் 123 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இது கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான நாட்டின் மிகப்பெரிய வளாகம் ஆகும்.

மறுவடிவமைக்கப்பட்ட ஐடிபிஓ வளாகத்தில் இருக்கும் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் (ஐஇசிசி) உலகின் முதல் 10 கண்காட்சி மற்றும் மாநாட்டு வளாகங்களில் ஒன்றாக திகழ்கிறது.

7 ஆயிரம் பேர் அமரும் வசதி

ஜெர்மனியில் உள்ள ஹானோவர் கண்காட்சி மையம், சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள தேசிய கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் போன்ற மகத்தான பெயர்களுக்கு போட்டியாக ஐஇசிசி உள்ளது.

ஐஇசிசி-ன் உயரம் மற்றும் உள்கட்டமைப்பின் அளவு, உலகத் தரம் வாய்ந்த நிகழ்வுகளை மிகப் பெரிய அளவில் நடத்தும் இந்தியாவின் திறனுக்கு ஒரு சான்றாகும். இந்த மாநாட்டு மையத்தில் 7,000 நபர்கள் அமரக்கூடிய பெரிய இருக்கை வசதி உள்ளது. இது ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஓபரா ஹவுசில் சுமார் 5,500 பேர் அமரும் திறனை விட பெரியதாக உள்ளது.

அதிநவீன அரங்குகள்

இந்த ஈர்க்கக்கூடிய அம்சம், உலக அளவில் மிகப்பெரிய மாநாடுகள், சர்வதேச உச்சி மாநாடுகள் மற்றும் கலாசார நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்ற இடமாக ஐஇசிசி-யை தேர்வு செய்ய தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்புகள், புதுமைகள் மற்றும் யோசனைகளைக் காட்சிப்படுத்த 7 புதுமையான இடங்களை கண்காட்சி அரங்குகள் வழங்குகின்றன. இந்த அதிநவீன அரங்குகள் கண்காட்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சிறந்த தளத்தை வழங்குகிறது. இவை வணிக வளர்ச்சி மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை மேம்படுத்துகிறது.

சிக்னல் இல்லாத சாலைகள்

அத்துடன், ஐஇசிசி-ல் 3,000 நபர்கள் அமரும் வகையிலான திறந்தவெளி அரங்கமும் உள்ளது. இந்த பிரமாண்டமான அரங்கம், பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பார்வையாளர்களை வசீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்வையாளர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஐஇசிசி-ல் 5,500க்கும் மேற்பட்ட வாகன நிறுத்த இடங்களும் உள்ளன. பார்வையாளர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் செல்ல முடியும் என்பதை உறுதி செய்யும் வகையில், சிக்னல் இல்லாத சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story