லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு பெற்றவரின் விவரங்கள் வெளியிட மறுப்பு: கேரளாவில் பரபரப்பு


லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு பெற்றவரின் விவரங்கள் வெளியிட மறுப்பு: கேரளாவில் பரபரப்பு
x

பணம் கேட்டு தொல்லை கொடுப்பார்கள் என்பதால் லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு பெற்றவரின் விவரங்கள் வெளியிட மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு பலகோடி வருவாய் கிடைத்து வருகிறது. அதில் ஓணம், சித்திரை விசு, கிறிஸ்துமஸ், ஆங்கிலபுத்தாண்டு உள்பட பண்டிகை நாட்களில் சிறப்பு பம்பர் குலுக்கல் நடத்தப்படுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஓணத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடி திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவருக்கு கிடைத்தது. அவரை பற்றிய தகவல்கள் பத்திரிகைகளில் வெளியானது. இதனைத்தொடர்ந்து உறவினர்கள் ஏராளமானோர் அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கினர். இதனால் அவர் தன்னுடைய வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக அவர் கதறி அழுதபடி வீடியோவும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 21-ந் தேதி நடந்த பூஜா பம்பர் குலுக்கலில் திருச்சூரில் விற்பனையான சீட்டுக்கு ரூ.10 கோடி பரிசு விழுந்தது. ஆனால் முதல் பரிசு ரூ.10 கோடி கிடைத்த நபர், யாரிடமும் தெரிவிக்காமல் நேரடியாக லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு சென்று ரூ.10 கோடி பரிசு கிடைத்த விவரத்தை தெரிவித்தார். மேலும் அவர் தனது பெயரை வெளியிட வேண்டாம் என கூறியதாக லாட்டரி இயக்குனரகம் அறிவித்து உள்ளது. இதேபோல கடந்த 19-ந் தேதி நடைபெற்ற கிறிஸ்துமஸ் - புத்தாண்டு பம்பர் குலுக்கலில் முதல் பரிசு ரூ.16 கோடி பாலக்காட்டில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்துள்ளது. இந்த பரிசை பெற்ற அதிர்ஷ்டசாலி யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் 2 அதிர்ஷ்டசாலிகளும் தங்களது பெயர் விவரங்களை வெளியிட வேண்டாம் என்றும், அப்படி வெளியிட்டால் உறவினர்களும், நண்பர்களும் பணம் கேட்டு தொல்லை கொடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் பரிசு பெற்ற நபர் கேட்டுக்கொண்டதால் பெயர் விவரங்களை வெளியிட லாட்டரி இயக்குனரகத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளது. இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story