குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடக ஊர்தி நிராகரிப்பு; மோடியின் பழிவாங்கும் மந்திரம் - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
கர்நாடக தேர்தலில் ஏற்பட்ட கடுமையான தோல்வியை பிரதமர் மோடி மறக்கவோ, மன்னிக்கவோ இல்லை என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
குடியரசு தின விழாவையொட்டி வருகிற 26-ந் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்கள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அந்த வகையில் கர்நாடக அரசு சார்பில் சிறுதானியங்களை முன்னிறுத்தும் வகையில் அலங்கார ஊர்தியை இடம் பெற செய்ய மாநில அரசு முடிவு செய்தது. ஆனால் கர்நாடக அரசின் ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 13 ஆண்டுகளாக பங்கேற்ற கர்நாடகத்திற்கு இந்த முறை அனுமதி நிராகரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையடுத்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடக மாநிலத்தின் ஊர்தியை நிராகரித்ததன் மூலம் ஏழு கோடி கன்னடர்களை மத்திய அரசு அவமதித்துள்ளது" பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சித்தராமையாவின் பதிவை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "இது மோடியின் பழிவாங்கும் மந்திரம். கடந்த மே 2023-ல் கர்நாடக சட்டசபை தேர்தலில் அவருக்கும், அவரது கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட கடுமையான தோல்வியை அவர் மறக்கவோ, மன்னிக்கவோ இல்லை. உண்மையில் அவர் ஒரு சிறிய மனிதர்" என்று பதிவிட்டுள்ளார்.