கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 517 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் தேர்தல் களத்தில் 2,613 வேட்பாளர்கள் உள்ளனர்.
பெங்களூரு:-
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
வேட்பு மனு தாக்கல்
இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 21-ந் தேதி நடைபெற்றது. இதில் 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 3 ஆயிரத்து 44 மனுக்கள் ஏற்கப்பட்டன.
மனுக்கள் வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். காங்கிரஸ், பா.ஜனதாவில் டிக்கெட் எதிர்பார்த்து கிடைக்காத சில
பிரமுகர்கள் அதிருப்தி வேட்பாளர்களாக களமிறங்கி வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அவர்களை சமாதானப்படுத்தும் பணியில் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் நேற்று பலரும் தங்களது கட்சி அளித்த வேண்டுகோளுக்கு இணங்க வேட்பு மனுக்களை வாபஸ் பெற தேர்தல் அலுவலகங்களுக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர்.
2,613 வேட்பாளர்கள் உள்ளனர்
அதுபோல் சுயேச்ைசகள், கட்சி சாராத சங்கம், அமைப்பினர் தங்களுக்கு சின்னங்கள் ஒதுக்கவும் தேர்தல் அலுவலகங்களுக்கு வந்திருந்தனர். இதனால் தேர்தல் அலுவலகங்கள் பரபரப்பாக இயங்கின.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 517 பேர் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்று போட்டியில் இருந்து விலகி கொண்டனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது
இதில் சட்டசபை தேர்தல் களத்தில் 2,613 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 2,427 பேர் ஆண்களும், 184 பேர் பெண்களும், 3-ம் பாலினத்தினர் 2 பேரும் அடங்குவர். கட்சிகளை பொறுத்தவரையில் பா.ஜனதா வேட்பாளர்கள் 224 பேரும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 223 பேரும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 பேரும், ஆம் ஆத்மி வேட்பாளர்கள் 209 பேரும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் 133 பேரும், 918 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.
மேலும் பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளில் 704 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மனுக்கள் வாபஸ்
முன்னதாக பெங்களூரு சிக்பேட்டை தொகுதியில் காங்கிரசின் போட்டி வேட்பாளராக இருந்த முன்னாள் மேயர் கங்காம்பிகே கட்சி தலைவர்கள் கேட்டு கொண்டதை அடுத்து தனது மனுவை வாபஸ் பெற்றார்.
புலிகேசிநகர் தொகுதியில் மீண்டும் டிக்கெட் கிடைக்காததால், காங்கிரசின் போட்டி வேட்பாளராக அகண்ட சீனிவாசமூர்த்தி சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்துள்ளர். அவர் அதற்கான 'பி பாரம்' தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கினார். இதையடுத்து அவருக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்றார். காங்கிரசார் தன்னை கட்டாயப்படுத்தி மனுவை வாபஸ் பெற வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் வாபஸ்
புலிகேசிநகர் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் அன்பரசன் மனுவை வாபஸ் பெற்றார். அதே போல் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர்கள் 2 பேரும் மனுக்களை வாபஸ் பெற்றனர். அதாவது காந்திநகரில் அந்த அணி வேட்பாளர் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜூம் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றனர்.
புலிகேசிநகரில் அந்த அணியின் வேட்பாளர் நெடுஞ்செழியன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. காந்திநகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் குமாருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வாபஸ் பெற்றார்.
அனல் பறக்கும்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதை அடுத்து இனி கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மத்திய மந்திரிகள் மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக கர்நாடகத்திற்கு வரவுள்ளனர். இதனால் வரும் நாட்களில் தேர்தல் களத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






