குரங்கு அம்மை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு


குரங்கு அம்மை: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு
x

இந்தியாவில் குரங்கு அம்மை நோயைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

குரங்கு அம்மையை கட்டுப்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை நுழையவில்லை. இருப்பினும், பல நாடுகளில் பரவி இருப்பதால், அதை தடுப்பதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

கண் எரிச்சல், கண் வலி, பார்வை மங்குவது, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி உள்ளிட்டவைகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குரங்கு அம்மை பாதித்தவர்களையும், மொத்தமாக பாதித்த இடங்களையும் விரைவாக அடையாளம் காண வேண்டும். மேற்கொண்டு பரவுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிக்க வேண்டும்.

குரங்கு அம்மை என சந்தேகத்துக்குரிய மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி, உறுதி செய்ய வேண்டும். குரங்கு அம்மை பாதித்தவரின் தொடர்பில் இருந்தவர்களை தொற்று அறிகுறி ஏற்பட்டதில் இருந்து 21 நாட்களுக்கு நாள்தோறும் கண்காணிக்க வேண்டும்.

நோயாளிகளுக்கும், வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள் நன்றாக கை சுத்தத்தை பராமரிக்க வேண்டும். முழு கவச உடை அணிய வேண்டும். அதுபோல், குரங்கு அம்மை பாதித்த நாடுகளுக்கு சென்று வந்து அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளிகளை எல்லா ஆஸ்பத்திரிகளும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.

மாநில அளவில் அரசுகள் கண்காணிப்பு மையத்தை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும். மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப் பட்டாலும் அது எப்படி பரவியது, நோயால் பாதிக்கப்பட்டவர் எங்கிருந்து வந்தார் என்ற தகவலை உடனடியாக சேகரிக்க வேண்டும். மாநில மற்றும் யூனியன் யூனியன் பிரதேச அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story