தென்மேற்கு பருவமழை தீவிரம்: வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகளை விரைவாக வழங்க வேண்டும் - கலெக்டர்களுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவு


தென்மேற்கு பருவமழை தீவிரம்: வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகளை விரைவாக வழங்க வேண்டும் - கலெக்டர்களுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவு
x

கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை விரைவாக வழங்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

கலெக்டர்களுடன் ஆலோசனை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைநாடு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் சேதங்கள் உண்டாகியுள்ளன. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டார். இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் இருந்தபடி, நேற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், முதல்-மந்திரியின் முதன்மை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத், விபத்து நிவாரண பிரிவு அதிகாரி மனோஜா உள்பட பலர் உடன் இருந்தனர். தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, உடுப்பி, குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன் ஆகிய 7 மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து எடுத்து கூறினர். என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அவர்கள் விளக்கினர்.

நிவாரண உதவிகள்

அப்போது பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை விரைவாக வழங்க வேண்டும், வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு மக்களுக்கு உதவ வேண்டும், மீட்பு பணிகளில் சுணக்கம் இருக்க கூடாது என்று உத்தரவிட்டார். வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு அறிக்கை தயாரித்து அனுப்ப வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடியாக தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைவாக வழங்க வேண்டும். சாலைகளை சீரமைத்தல், மின் கம்பங்களை சரிசெய்தல் போன்ற பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மராட்டிய மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை கண்காணிக்க வேண்டும்.

கிராமங்களுக்கு எச்சரிக்கை

அணைகளில் இருந்து நீர் திறப்பதற்கு முன்பு கீழ் பகுதியில் வசிக்கும் கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும். இயற்கை பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகள்படி வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ள பாதிப்புகளை தீவிரமாக எடுத்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

பயிர் சேதம், சாலைகள் பழுது மற்றும் பிற பாதிப்பகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நிவாரண பணிகளை நேர்மையான முறையில் பாரபட்சம் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும். நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த வேண்டும்.

பயிர் சேதங்கள்

கிராம பஞ்சாயத்து அளவில் செயல்படைகளை அமைக்க வேண்டும். மாவட்ட-தாலுகா அளவில் உள்ள உதவி மையங்களுக்கு வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய இயற்கை பேரிடர் மற்றும் மாநில இயற்கை பேரிடர் மீட்பு குழுக்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு தொகுப்பு வழங்க வேண்டும்.

மழையால் தடைபட்டுள்ள மின்சாரத்தை சீர் செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு நடத்தி ஒரு மாதத்திற்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள உணவுகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story