போலீஸ் மந்திரி வீட்டுக்குள் புகுந்து மாணவர் அமைப்பினர் போராட்டம்; போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியிடம் அறிக்கை தாக்கல்


போலீஸ் மந்திரி வீட்டுக்குள் புகுந்து மாணவர் அமைப்பினர் போராட்டம்; போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியிடம் அறிக்கை தாக்கல்
x

பெங்களூருவில் மந்திரி அரக ஞானேந்திரா வீட்டுக்குள் புகுந்து மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்திய விவகாரத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணம் என போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

மந்திரி வீட்டுக்குள் புகுந்தனர்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலையை கண்டித்து கடந்த மாதம் (ஜூலை) 27-ந் தேதி ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது பெங்களூரு ஜே.சி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜெயமகால் பகுதியில் உள்ள போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா வீட்டை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் பாதுகாப்பையும் மீறி மந்திரியின் வீட்டுக்குள் மாணவர் அமைப்பினர் உள்ளே புகுந்து இருந்தாா்கள்.

இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் வினாயக் பட்டீலுக்கு, போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டு இருந்தார்.

கமிஷனரிடம் அறிக்கை தாக்கல்

அதன்படி, துணை போலீஸ் கமிஷனர் வினாயக் பட்டீல் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியிடம் நேற்று அவர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில், போலீஸ் மந்திரி வீட்டின் பாதுகாப்புக்காக நகர ஆயுதப்படையை சேர்ந்த 5 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள். அதே நேரத்தில் எந்த விதமான அனுமதியும் பெறாமல் மாணவர் அமைப்பினர், மந்திரி அரக ஞானேந்திரா வீட்டுக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

இதுபற்றி ஆயுதப்படை போலீசார், ஜே.சி.நகர் போலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்திருந்தனர். ஆனால் ஜே.சி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் 10 நாட்களுக்கு முன்பு தான் பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தார். புதிதாக அங்கு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை. சப்-இன்ஸ்பெக்டரிடம் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் மற்ற போலீஸ்காரர்களும் ரோந்து சென்றிருந்தனர்.

பாதுகாப்பு குறைபாடு

ஆயுதப்படை போலீசார் தகவல் தெரிவித்ததும், ஜே.சி.நகர் போலீசார் மந்திரியின் வீட்டுக்கு வருவதற்குள், போராட்டக்காரர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்திருந்தாா்கள். மாணவர் அமைப்பினரை ஆயுதப்படை போலீஸ்காரர்கள் தடுத்தும் முடியாமல் போய் இருந்தது. போராட்டம் பற்றிய முன்கூட்டியே தகவல் தெரியாததும், போலீஸ் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவும் மந்திரியின் வீட்டுக்குள் மாணவர் அமைப்பினர் நுழைந்திருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் வினாயக் பட்டீல் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையின்படி சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story