அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் குவைத் பயணம்; அதிர வைத்த குற்றவாளிகளின் தந்திர வேலை


அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் குவைத் பயணம்; அதிர வைத்த குற்றவாளிகளின் தந்திர வேலை
x

    Courtesy:  Ndtv

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகள் கைரேகை அறுவை சிகிச்சை செய்து மீண்டும் அந்நாட்டுக்கு வேலைக்கு சென்ற அதிர்ச்சி விவரம் தெரிய வந்துள்ளது.



ஐதராபாத்,



தெலுங்கானாவில் மல்காஜ்கிரி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த போலீசார் குழு ஒன்று கத்கேசர் போலீசாருடன் இணைந்து கூட்டாக அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதில், 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கஜலகொண்டுகாரி நாக முனீஸ்வர் ரெட்டி (வயது 36), சகபாலா வெங்கட ரமணா (வயது 39), பொவில்லா சிவசங்கர் ரெட்டி (வயது 25) மற்றும் ரெண்டில ராமகிருஷ்ண ரெட்டி (வயது 38) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இவர்களில் முனீஸ்வர் ரெட்டி கடப்பாவில் உள்ள ஆய்வகத்தில் கதிரியக்கம் மற்றும் எக்ஸ்-ரே நிபுணராக உள்ளார். வெங்கட ரமணா திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் மயக்க மருந்தியல் பிரிவில் ஊழியராக உள்ளார்.

பொவில்லா சிவசங்கர் ரெட்டி மற்றும் ரெண்டில ராமகிருஷ்ண ரெட்டி இருவரும் குவைத்தில் கட்டுமான தொழிலாளர்களாக உள்ளனர்.

அவர்கள் அனைவரும் கடப்பாவில் இருந்து வந்து ஐதராபாத் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். கத்கேசரில் உள்ள பலருக்கு கைரேகை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அவர்கள் வந்துள்ளனர்.

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகள் பலருக்கு கைரேகை அறுவை சிகிச்சை செய்து மீண்டும் அவர்கள் அந்நாட்டுக்கு திரும்பி வேலைக்கு செல்வதற்கு உதவிய அதிர்ச்சி விவரம் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பின் தெரிய வந்துள்ளது.

குவைத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு, பின்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, மீண்டும் அந்த நாட்டுக்கு செல்ல முயன்ற 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 11 பேருக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சை நடந்து உள்ளது.

இதன்படி, கைவிரல் முனைப்பகுதியில் மேல் அடுக்கில் அறுவை சிகிச்சை செய்து, திசுவின் ஒரு பகுதியை நீக்கி விடுகின்றனர். பின்னர் மீண்டும் தையல் போட்டு விடுகின்றனர்.

ஓரிரு மாதங்களில், காயம் குணமடைந்து, கைரேகையானது சற்று வேறுபட்டு ஓராண்டுக்கு இருக்கும். இந்த வேறுபட்ட கைரேகையை கொண்டு இந்தியாவில், ஆதார் அட்டையில் மறுபதிவு செய்து, புது முகவரியுடன் குவைத்திற்கு மீண்டும் செல்ல புதிய விசாவுக்கு விண்ணப்பிக்கின்றனர் என போலீசார் கூறியுள்ளனர்.


Next Story