திருத்திய பள்ளி பாட புத்தகங்களை வாபஸ் பெற வேண்டும்- முதல்-மந்திரிக்கு தேவேகவுடா கடிதம்


திருத்திய பள்ளி பாட புத்தகங்களை வாபஸ் பெற வேண்டும்-  முதல்-மந்திரிக்கு தேவேகவுடா கடிதம்
x

குவெம்பு, அம்பேத்கர், பசவண்ணர் குறித்த தகவல்கள் நீக்கப்பட்டதால் திருத்திய பள்ளி பாட புத்தகங்களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு தேவேகவுடா கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு: குவெம்பு, அம்பேத்கர், பசவண்ணர் குறித்த தகவல்கள் நீக்கப்பட்டதால் திருத்திய பள்ளி பாட புத்தகங்களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு தேவேகவுடா கடிதம் எழுதியுள்ளார்.முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பசவண்ணரின் போராட்டங்கள்

கர்நாடக அரசு பள்ளி பாடத்திட்டங்களை மாற்ற பாடநூல் குழு தலைவரை நியமனம் செய்தது. அந்த தலைவர், தேசியகவி குவெம்பு எழுதிய கன்னட கீதத்திற்கு அவமானம் இழைத்துள்ளார். அந்த கீதத்தை திரித்து எழுதி அவமானம் இழைத்தவருக்கு விருது கொடுப்பதாக அரசு கூறுவது குவெம்புவை அவமதிப்பது போன்றதாகும். கன்னட கீதத்தை உள்ளாடையுடன் ஒப்பிட்டு கூறியது நமது அடையாளத்திற்கு செய்த அவமானம் ஆகும்.

அத்துடன் அம்பேத்கரையும் அவமதித்துள்ளார். இத்தகைய நபரின் தலைமையில் பாடநூல் குழுவை அமைத்தது மிகப்பெரிய தவறு. பள்ளியில் சமூக அறிவியலில் உள்ள சில பாடங்களில் இருந்து குவெம்புவின் படங்கள் நீக்கப்பட்டுள்ளன. பசவண்ணரின் போராட்டங்கள் குறித்த தகவல்களும் கைவிடப்பட்டுள்ளன. துமகூரு சித்தகங்கா மற்றும் ஆதிசுஞ்சனகிரி மடங்களின் சேவைகள் குறித்த தகவல்களும் நீக்கப்பட்டுள்ளன.

அரசியல் சாசன சிற்பி

அம்பேத்கர் குறித்த அரசியல் சாசன சிற்பி என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இன்னும் பல மகான்களின் பாடங்களும் கைவிடப்பட்டுள்ளன. அம்பேத்கர், குவெம்புவின் சமூகநீதி, மதச்சார்பின்மை உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறவில்லை. இந்த தவறுகளை மீண்டும் சரிசெய்வது என்பது எளிதான விஷயம் அல்ல.

அதனால் இந்த திருத்தப்பட்ட பள்ளி பாடப்புத்தகங்களை வாபஸ் பெற்று ஏற்கனவே இருந்த அதே தகவல்கள் அடங்கிய புதிய பாட புத்தகங்களை அச்சிட்டு மாணவர்களுக்கு வினியோகிக்க வேண்டும்.

இவ்வாறு தேவேகவுடா தெரிவித்துள்ளார்.


Next Story