டெல்லியில் பரபரப்பு: சீன தூதரகத்திற்கு வெளியே திபெத்திய இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
திபெத்தியர்களின் மரபணு சேகரிப்பை நிறுத்த வலியுறுத்தி டெல்லியில் சீன தூதரகத்திற்கு வெளியே இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.
புதுடெல்லி,
சீன தேசிய தினம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் மா சேதுங் போதனைகளின்படி நாடு முழுவதும் பரவலாக மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம்.
1949-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி சீனாவின் புதிய பிரதமரான மா சேதுங் சீன தேசிய கொடியை, டையனமென் சதுக்கத்தில் ஏற்றினார். சீன மக்கள் குடியரசு என்ற புதிய கம்யூனிஸ்டு நாடு பிறந்துள்ளது என அறிவிப்பும் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து, அடுத்த நாளான அக்டோபர் 2-ந்தேதி, புதிய அரசானது சீனாவின் தேசிய நாளாக அக்டோபர் 1-ந்தேதியை கொண்டாடுவது என தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த சூழலில், புதுடெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு வெளியே திபெத்திய இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தியது.
அவர்கள், திபெத்தியர்களிடம் இருந்து பெருமளவில் மரபணுக்களை சேகரிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். எங்களுக்கு சுதந்திரம் வேண்டும். மனித உரிமை மீறல்களை நிறுத்துங்கள்.
சுதந்திர திபெத் வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியபடி ஆண்கள், பெண்கள் என இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.