வீட்டில் ஏ.கே. 47 ரக துப்பாக்கி, கையெறி குண்டுகள் பறிமுதல் - எம்.எல்.ஏ.வுக்கு 10 ஆண்டுகள் சிறை
எம்.எல்.ஏ. வீட்டில் இருந்து ஒரு ஏ.கே. 47 ரக துப்பாக்கி, கையெறி குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாட்னா,
பீகார் மாநிலம் மொகமா தொகுதி ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங். இவரது வீட்டில் கடந்த 2019 ஆகஸ்ட் 16-ம் தேதி போலீசார் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் எம்.எல்.ஏ. வீட்டில் இருந்து ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கி, 2 கையெறி குண்டுகள், 26 சுற்று தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீட்டில் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட உடன் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் தலைமறைவானார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் சோதனை நடைபெற்ற சில நாட்களில் டெல்லியில் உள்ள கோர்ட்டில் ஆனந்த் சிங் சரணடைந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு பாட்னாவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.
அதில், வீட்டில் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாக பதியப்பட்ட வழக்கில் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளி ஆனந்த் சிங்கிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.