ஜார்க்கண்டில் பயங்கரம்: ஓடும் ரெயிலில் பயணிகளை தாக்கி பணம், செல்போன்கள் கொள்ளை


ஜார்க்கண்டில் பயங்கரம்: ஓடும் ரெயிலில் பயணிகளை தாக்கி பணம், செல்போன்கள் கொள்ளை
x

கோப்புப்படம் 

ஜார்க்கண்டில் ஓடும் ரெயிலில் கொள்ளை கும்பல் ஒன்று, பயணிகளிடம் இருந்து பணம், செல்போன்கள் உள்பட ரூ.75,800 மதிப்புடைய பொருட்களை கொள்ளையடித்தது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேஹர் ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு சம்பல்பூர்-ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது 10 முதல் 12 பேரை கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று, ரெயிலின் 'எஸ்9' பெட்டியில் ஏறியது. ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் புறப்பட்டதும் அந்த கொள்ளை கும்பல் பயணிகளிடம் துப்பாக்கியை காட்டி பணம், செல்போன்கள் உள்ளிட்டவற்றை தரும்படி மிரட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பயணிகளில் சிலர் கொள்ளை சம்பவத்தை தடுக்க முயன்ற நிலையில், அவர்களை கொள்ளை கும்பல் சரமாரியாக தாக்கியது. மேலும் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக கொள்ளை கும்பல் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. இதனால் பயந்துபோன பயணிகள் சிலர் தங்களிடம் இருந்த பணம், செல்போன் உள்ளிட்டவற்றை கொள்ளை கும்பலிடம் கொடுத்தனர். இப்படி 13 பயணிகளிடம் இருந்து பணம், செல்போன்கள் உள்பட ரூ.75 ஆயிரத்து 800 மதிப்புடைய பொருட்களை அந்த கும்பல் கொள்ளையடித்தது.

பின்னர் அடுத்த ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும் கொள்ளை கும்பல் ரெயிலில் இருந்து இறங்கி தப்பியோடியது. இதனிடையே சம்பவம் குறித்து அறிந்து வந்த ரெயில்வே போலீசார் கொள்ளை கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த 7 பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story