ஆந்திர என்ஜினீயரிடம் கொள்ளையடித்த காதலி உள்பட 2 பேர் கைது


ஆந்திர என்ஜினீயரிடம் கொள்ளையடித்த காதலி உள்பட 2 பேர் கைது
x

ஆந்திர சாப்ட்வேர் என்ஜினீயரை கடத்தி ரூ.23 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் காதலி உள்பட 2 பேரை நந்திகிரிதம் போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

ஆந்திர சாப்ட்வேர் என்ஜினீயரை கடத்தி ரூ.23 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் காதலி உள்பட 2 பேரை நந்திகிரிதம் போலீசார் கைது செய்தனர்.

சாப்ட்வேர் என்ஜினீயர்

ஆந்திரா மாநிலம் அனந்தப்பூரை சேர்ந்தவர் விஜய்சிங் (வயது 32), சாப்ட்வேர் என்ஜினீயர். பெங்களூருவில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஆந்திரா மாநில போடத்தூரை சேர்ந்த பாவனா ரெட்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டனர். மேலும் வெளியே சுற்றி வந்தனர்.

அப்போது விஜய்சிங்தான் செலவு செய்து வந்தார். இதை பார்த்து பாவனா ரெட்டி, விஜய்சிங்கிடம் அதிகளவு பணம் இருப்பதை தெரிந்து கொண்டார். மேலும் அந்த பணத்தை பறிக்க முயற்சித்தார். இதற்காக கூலிப்படையை சேர்ந்த புல்லா ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளான சுப்பிரமணி, நாகேஷ் ரெட்டி, சித்தேஷ், சுதீர் ஆகியோரின் உதவியை நாடினார்.

அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சிக்பள்ளாப்பூர் மாவட்டம் தேவனஹள்ளியை அடுத்த நந்திகிரிதம் பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு விஜய் சிங்கை வரவழைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

ரூ.23 லட்சம் கொள்ளை

அதன்படி கடந்த 16-ந் தேதி பாவனா ரெட்டி, விருந்து இருப்பதாக கூறி விஜய்சிங்கை நந்திகிரிதம் பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு வரும்படி கூறினார். அதன்படி விஜய்சிங்கும் சென்றார். அங்கு பாவனா ரெட்டி இல்லை. மாறாக புல்லாரெட்டி கும்பல்தான் இருந்தது. அவர்கள் விஜய்சிங்கை மடக்கி சரமாரியாக தாக்கி சிறை வைத்தனர். மேலும் தாக்கிய வீடியோ பாவனா ரெட்டிக்கு காண்பித்து, பணம் கேட்டு மிரட்டினர்.

இதனால் உயிருக்கு பயந்த விஜய்சிங் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.8 லட்சம் மற்றும் செல்போன் செயலில் கடன் வாங்கி ரூ.13 லட்சத்தை, அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். மேலும் அந்த கும்பல் செல்போன், மடிக்கணினி, 12 கிராம் தங்க நகைகளை பறித்தனர். அதை வாங்கிய கும்பல் விஜய்சிங்கை விடவில்லை.

தொடர்ந்து 3 நாட்கள் சொகுசு விடுதிலேயே வைத்து சித்தரவதை செய்து, கடந்த 18-ந் தேதி விடுவித்தனர். இந்த சம்பவத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட விஜய்சிங் இது குறித்து நந்திகிரிதம் போலீசில் புகார் அளித்தார். அதில் ரூ.23 லட்சம் ரொக்கம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்ததாக கூறியிருந்தார்.

காதலி உள்பட 2 பேர் கைது

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்தனர். அப்போது விஜய்சிங், பாவனா ரெட்டி மீது சந்தேகம் இருப்பதாக கூறினார். இதையடுத்து போலீசார் பாவனா ரெட்டியின் நடவடிக்கை கண்காணித்தனர். அதில் சந்தேகம் ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று பாவனா ரெட்டி மற்றும் கொள்ளை கும்பலை சேர்ந்த புல்லா ரெட்டி என்பரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் புல்லா ரெட்டி, விஜய்சிங்கின் நண்பர் என்று கூறப்படுகிறது. அடிக்கடி புல்லா ரெட்டியின் வீட்டிற்கு செல்லும்போது, புல்லா ரெட்டியின் மனைவியுடன் விஜய்சிங்கிற்கு பழக்கம் ஏற்பட்டது.

இது புறம் இருக்க விஜய்சிங், பாவனா ரெட்டியை காதலித்துள்ளார். இவர்களது காதல் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்றதும், பாவனா ரெட்டி விஜய்சிங்கிடம் இருந்து பிரிந்து செல்ல திட்டமிட்டார். முன்னதாக விஜய்சிங்கிடம் இருக்கும் பணத்தை பறித்துவிட்டு செல்லலாம் என்று அவர் முடிவு செய்தார். இதற்காக விஜய்சிங்கின் நண்பர் புல்லா ரெட்டியின் உதவியை நாடினார். அவர் சம்மதம் தெரிவிக்கவே 2 பேரும் சேர்ந்து, விஜய்சிங்கிடம் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story