பெங்களூருவில் கொள்ளையடிக்க திட்டம்: ரவுடி உள்பட 5 பேர் கைது
பெங்களூருவில் கொள்ளையடிக்க திட்டமிட்ட ரவுடி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் ரவுடி வினோத் என்ற கட்டி வினோத், இவருடைய கூட்டாளிகளான கவுதம், மது, தேவலிங்கா, சாகர் என்று தெரிந்தது. இவர்கள் 5 பேரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காகவும், சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காகவும், சிறையில் இருக்கும் போது தங்களை ஜாமீனில் எடுப்பதற்காகவும் நகரில் தனியாக வரும் நபர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.
அதுபோல், கோவிந்தராஜநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எம்.சி. லே-அவுட்டில் தனியாக வருபவர்களை தாக்கி கொள்ளையடிக்க திட்டமிட்டு காத்து நின்ற போது ரவுடி உள்பட 5 பேரும் போலீசாரிடம் சிக்கி இருந்தார்கள். கைதான 5 பேரிடம் இருந்து ஆயுதங்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 5 பேர் மீதும் கோவிந்தராஜநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.