திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி
சிவமொக்கா அருகே திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது
சிவமொக்கா: சிவமொக்கா அருகே திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
பெண் போலீஸ்காரர்
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி டவுன் கல்லாபுரா பகுதியில் பெண் போலீஸ்காரர் ஒருவர் வசித்து வருகிறார். இவர், தீர்த்தஹள்ளி மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இதேபோல் தீர்த்தஹள்ளி வனத்துறையில் வனக்காவலராக பிரவீன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் பெலகாவி மாவட்டம் சங்கேஷ்வர் ஆகும்.
இந்த நிலையில் பிரவீனுக்கும், பெண் போலீஸ்காரருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதன்படி கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் உயிருக்கு, உயிராக காதலித்து வந்துள்ளனர்.
காதலுக்கு எதிர்ப்பு
இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதுபற்றி தங்கள் பெற்றோரிடம் கூறி சம்மதம் கேட்டுள்ளனர். ஆனால் வேறு சாதி என்பதால் இருவீட்டு பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணத்திற்கு மறுத்துள்ளனர்.
மேலும் காதலை கைவிடும்படி அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் காதல் ஜோடி மனமுடைந்து உள்ளனர். இதற்கிடையே தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
விஷம் குடித்தனர்
அதன்படி நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்து பிரவீனும், பெண் போலீஸ்காரரும் பத்ராவதி ஆர்.எம்.சி. பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கு விஷம் குடித்து 2 பேரும் தற்கொலைக்கு முயன்றனர். இதனால் 2 பேரும் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், 2 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த பத்ராவதி பழைய டவுன் போலீசார் ஆஸ்பத்திரிக்கும், சம்பவ இடத்திற்கும் சென்று விசாரணை நடத்தினர். அதில் காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்து காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பத்ராவதி பழைய டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.