பழைய கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் சாவு- பீகாரை சேர்ந்தவர்கள்
பெங்களூருவில் பெய்த கனமழைக்கு பழமையான கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் பெய்த கனமழைக்கு பழமையான கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.
கட்டிட மேற்கூரை இடிந்தது
பெங்களூரு மகாதேவபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹீடி பகுதியில் ஒரு பழமை வாய்ந்த கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. இந்த பணியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்து அகற்றி உள்ள தொழிலாளர்கள், இன்னொரு பகுதியில் இரவில் தங்கி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் இரவு முழுவதும் மழை பெய்தது.
குறிப்பாக ஹீடி பகுதியில் பெய்த கனமழையால் அந்த பழைய கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த கட்டிடத்தில் தூங்கி கொண்டு இருந்த 5 பீகார் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மகாதேவபுரா போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
2 தொழிலாளர்கள் சாவு
ஆனால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் உயிரிழந்தவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த அர்மான் (வயது 22), ஜைனுதீன் (28) என்பது தெரியவந்தது. மற்ற 3 பேரின் பெயர், விவரங்கள் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து மகாதேவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் மகாதேவபுரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.