தொழில்அதிபரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி
குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் வழங்குவதாக கூறி தொழில்அதிபரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்த மர்மநபா்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு டவுன் துபாய் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது சித்திக். தொழில் அதிபர். இவரது செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், வீட்டுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம் என்ற தகவல் இருந்தது.
இதையடுத்து அவர், அந்த குறுந்தகவலில் இருந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். பின்னர் அதில் கேட்ட விவரங்களை முகமது சித்திக் பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து அவரது செல்போனுக்கு வந்த ஓ.டி.பி. எண்ணையும் அவர் பதிவு செய்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளில் ரூ1.13 லட்சம் எடுக்கப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு சென்று விசாரித்தார்.
அப்போது தான், மர்மநபர்கள் நூதன முறையில் ரூ.1.13 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிக்கமகளூரு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.