புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு


புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு
x
தினத்தந்தி 6 March 2024 9:14 AM GMT (Updated: 6 March 2024 10:26 AM GMT)

சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் பாடசாலை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த 2-ந்தேதி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானாள். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாயமான சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் சாக்கடை கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சாக்கடை கால்வாயில் தேடினார்கள். அப்போது வேட்டியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் சிறுமியின் உடல் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடைக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சாக்கடையில் இருந்து சிறுமியின் உடல் கை, கால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியது. மேலும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. சிறுமியை கடத்தி கொடூரமாக கொன்று உடலை சாக்கடையில் வீசியது ஏன்? பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாளா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த வழக்கில் இன்று 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி கொலையை கண்டித்து புதுச்சேரியில் போராட்டம் வலுத்துள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடற்கூராய்வு ஜிப்மர் மருத்துவமனையில் தாசில்தார் பிரித்வி முன்னிலையில் தொடங்கியுள்ளது. மாணவியின் உடற்கூராய்வை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்கின்றனர்.

குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று பெற்றோர் கூறியிருந்த நிலையில், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறுமியின் பெற்றோரை சந்தித்து பேசினார். இந்த நிலையில் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.


Next Story