7 எம்‌.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர ரூ.40 கோடி பேரம்- காங்கிரஸ் குற்றச்சாட்டு


7 எம்‌.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் சேர ரூ.40 கோடி பேரம்- காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

கோவாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

பனாஜி,

கோவாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. 11 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் முக்கிய எதிர்க்கட்சியானது. தேர்தலின் போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திகம்பர் காமத் தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த மைக்கேல் லோபோ எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார்.

அப்போது முதலே திகம்பர் காமத் கட்சி மேலிடத்தின் மீது ஆத்திரத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவா சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்துடன் விரைவில் தொடங்க உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் திகம்பர் காமத் உட்பட 7 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் 7 பேரும் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. மைக்கேல் லோபோவும் பா.ஜ.க.வுடன் பேசி வருதாக தகவல் வெளியாகியுள்ளன. இதை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்தது.

இதற்கிடையே மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. இதில் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ இருவரும் கட்சிக்கு எதிராக சதி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோவை காங்கிரஸ் நீக்கியது. இந்த நிலையில் பா.ஜ.க.வில் சேர காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்களுக்கு ரூ.40 கோடி வரை பேரம் நடப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிரிஷ்சோடங்கர் குற்றம் சாட்டியுள்ளார். தொழிலதிபர்கள் மற்றும் நிலக்கரி மாபியா ஆகியோர் மூலம் இந்த பேரம் நடந்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனை அம்மாநில பா.ஜ.க மறுத்துள்ளது.


Next Story