போக்சோ வழக்கில் தவறான நபரை கைது செய்த பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம்; மங்களூரு கோர்ட்டு உத்தரவு


போக்சோ வழக்கில் தவறான நபரை கைது செய்த பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம்; மங்களூரு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:45 PM GMT)

போக்சோ வழக்கில் தவறான நபரை கைது செய்த பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து மங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மங்களூரு:

போக்சோவில் தவறான நபர் கைது

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த மைனர்பெண் ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில் மங்களூருவை சேர்ந்த நவீன் சேகுவேரா என்ற வாலிபரை மகளிர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைத்தனர்.

இந்த நிலையில், மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் தவறான நபரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்ததாக தெரிகிறது. அதாவது, மைனர்பெண்ணை பலாத்காரம் செய்த நவீன் என்பவரை கைது செய்வதற்கு பதிலாக நவீன் சேகுவேராவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், மைனர்பெண்ணும் தனது வாக்குமூலத்திலும் நவீன் என்ற பெயரையே குறிப்பிட்டுள்ளாா். ஆனாலும் போலீசார் நவீன் சேகுவேரா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

ரூ.5 லட்சம் அபராதம்

இந்த வழக்கு விசாரணை மங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நவீன் சேகுவேரா தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ராஜேஷ்குமார், அம்தாடி ஆகியோர் வாதாடினர். அப்போது, நவீன் சேகுவேரா ஒரு அப்பாவி. மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் ரோசம்மா மைனர்பெண் பலாத்கார வழக்கில் தவறான நபரை கைது செய்து ஓராண்டு நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். மேலும் தவறான நபர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர் என்றனர்.

இந்த வாதத்தை கேட்டறிந்த நீதிபதி ராதாகிருஷ்ணா நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நவீன் சேகுவேரா மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. போலீசார் தவறான நபரை கைது செய்து ஓராண்டு நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். நவீன் சேகுவேரா நிரபராதி. இதனால் அவரை விடுதலை செய்கிறேன் என்று நீதிபதி கூறினார். மேலும் தவறான நபரை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் ரோசம்மாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story