போலி ஆவணங்கள் தயாரித்து விவசாய நிலத்தை விற்று ெதாழில்அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி


போலி ஆவணங்கள் தயாரித்து விவசாய நிலத்தை விற்று ெதாழில்அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 3 Aug 2023 6:45 PM GMT (Updated: 3 Aug 2023 6:45 PM GMT)

போலி ஆவணங்களை தயாரித்து விவசாய நிலத்தை விற்று தொழில்அதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தாபஸ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெனஜனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புட்டண்ணா, விவசாயி. இவருக்கு தாபஸ்பேட்டை அருகேயே 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு லட்சுமிகாந்த் என்பவர் போலி ஆவணங்களை தயாரித்துள்ளார். பின்னர் தொழில் அதிபரான அனுமந்தராஜை சந்தித்து தனக்கு தெரிந்தவரின் விவசாய நிலம் விற்பனைக்கு இருப்பதாகவும், அதனை வாங்கி கொள்ளும்படி லட்சுமிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதனை அனுமந்தராஜிம் நம்பி, அந்த நிலத்தை வாங்க சம்மதித்துள்ளார். இதையடுத்து, அந்த 4 ஏக்கர் நிலத்திற்கு ரூ.50 லட்சம் கொடுக்கும்படி லட்சுமிகாந்த் கேட்டுள்ளார். இதையடுத்து, முதலில் ரூ.15 லட்சத்தை வங்கி பரிவர்த்தனை மூலமாகவும், பின்னர் ரூ.20 லட்சத்தை ரொக்கமாகவும் லட்சுமிகாந்திடம் அனுமந்தராஜ் வழங்கி இருந்தார். மீதி ரூ.15 லட்சத்தை பத்திரப்பதிவின் போது கொடுப்பதாக அனுமந்தராஜ் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, புட்டண்ணா பெயரில் போலி ஆதார் அடையாள அட்டை தயாரித்தும், அவரது புகைப்படத்திற்கு பதிலாக வேறு ஒருவர் புகைப்படத்தையும் லட்சுமிகாந்த் ஒட்டியுள்ளார். மேலும் புட்டண்ணா எனக்கூறி வேறு ஒரு நபரை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அவர் அழைத்து சென்றிருந்தார்.

இதனை அதிகாரிகளும் நம்பி, புட்டண்ணா பெயரில் இருந்த நிலத்தை அனுமந்தராஜ் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்திருந்தனர். இதையடுத்து, ரூ.15 லட்சத்தையும் லட்சுமி காந்திடம் அனுமந்தராஜ் கொடுத்திருந்தார். தான்வாங்கிய நிலத்தை பார்க்க சென்ற போது அனுமந்தராஜிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு நிலத்திற்கு சொந்தமான விவசாயி புட்டண்ணா நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, தான் இந்த நிலத்தை ரூ.50 லட்சம் கொடுத்து வாங்கி இருப்பதாக புட்டண்ணாவிடம் அனுமந்தராஜ் தெரிவித்துள்ளார். ஆனால் இது தன்னுடைய விவசாய நிலம், இங்கு பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன், யாரிடமும் இந்த நிலத்தை விற்கவில்லை என்றும், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்திருப்பதாகவும் புட்டண்ணா கூறியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன அனுமந்தராஜ், நடந்த சம்பவங்கள் பற்றி தாபஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் லட்சுமிகாந்த் உள்பட 3 பேர் மீது புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லட்சுமிகாந்த் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story