வெள்ளி இறகுகள், வெள்ளை முகம், காணாமல் போன கிளியை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு நூதன அறிவிப்பு


வெள்ளி இறகுகள், வெள்ளை முகம், காணாமல் போன கிளியை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு நூதன அறிவிப்பு
x

கிளியின் படத்துடன் பேனர் வைத்தும், துண்டு பிரசுரம் வினியோகித்தும் வருகிறார்கள். மேலும் கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் துமகூரில் உள்ள ஜெயநகரைச் சேர்ந்தவர் அர்ஜுன்-ரஞ்சனா தம்பதி. இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக ஆப்பிரிக்கன் வகையை சேர்ந்த ஒரு ஜோடி கிளிகளை பாசத்துடனும், நேசத்துடனும் வளர்த்து வந்தனர். அதில் ஆண் கிளிக்கு ருஸ்துமா என்று பெயரிட்டிருந்தனர்.

அதோடு ஆண்டுதோறும் கிளிக்கு பிறந்த நாள் விழாவையும் நடத்தி வந்தனர். ஆண் கிளி ருஸ்துமா கடந்த 16-ந்தேதி திடீரென காணாமல் போனது. நகர் முழுவதும் அர்ஜுன்- ரஞ்சனா தேடி வந்தனர். பல இடங்களில் தேடியும் அந்த கிளி கிடைக்கவில்லை. கிளி மீது மிகுந்த பாசத்துடன் இருந்த குடும்பத்தினர், அது திரும்பி வராததால் கண்ணீர் விட்டு அழுதனர். இந்த நிலையில், அந்த தம்பதி தங்கள் கிளியை தேட தொடங்கி உள்ளனர்.

இதற்காக அவர்கள் கிளியின் படத்துடன் பேனர் வைத்தும், துண்டு பிரசுரம் வினியோகித்தும் வருகிறார்கள். மேலும் கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.கடந்த 4 நாட்களாக தம்பதியினர் இரவு, பகலாக கிளியை தேடி வருகிறார்கள்.

ஆனால் இன்னும் கிளியை பற்றி அவர்களுக்கு தகவல் கிடைக்கவில்லை. ஆண் கிளி மாயமானதால், பெண் கிளி கூண்டுக்குள் தவித்து வருகிறது . அர்ஜூன்-ரஞ்சனா தம்பதியினர் வளர்த்துவந்த ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மத்திய ஆப்பிரிக்காவின் மழைக்காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை. இவை ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் பரவியுள்ளன. கிளி வகைகளில் மிகப்பெரியது.

வெள்ளி இறகுகள், ஒரு வெள்ளை முகம், சிவப்பு நிற வால் கொண்டுள்ளது. மற்ற கிளி இனங்களை விட இந்த கிளிகள் பிரகாசமான இறகுகளை கொண்டுள்ளன. குறிப்பாக 5 வயது குழந்தைக்கு சமமான அறிவாற்றல் இவைகளுக்கு இருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.


Next Story