பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கிய இணையவழி கோர்ட்டு திட்டத்தால் நீதித்துறை செயல்திறன் மேம்படும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி


பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கிய இணையவழி கோர்ட்டு திட்டத்தால் நீதித்துறை செயல்திறன் மேம்படும் - சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
x

மத்திய பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள இணையவழி கோர்ட்டு திட்டத்தால், நீதித்துறை செயல்திறன் மேம்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டு ஆண்டு விழா

சுப்ரீம் கோர்ட்டின் 73-வது ஆண்டு விழா நடந்தது. இதில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் கோர்ட்டு நடவடிக்கைகள் மக்களை சென்றடைவதற்காக காணொலிக்காட்சி முறையை சுப்ரீம் கோர்ட்டு பின்பற்றியது.

நீதித்துறை செயல்திறன்

சமீபத்தில் பட்ஜெட்டில் இ-கோர்ட்டு (இணைய வழி கோர்ட்டு) திட்டத்தின் மூன்றாவது கட்டத்துக்கு மத்திய அரசு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது கோர்ட்டுகளை மக்கள் வந்து அடைவதை அதிகரிக்கும். இதனால் இந்தியாவில் நீதித்துறை செயல்திறன் அதிகரிக்கும். இத்தகைய சீரிய முயற்சி, கோர்ட்டு ஒவ்வொரு இந்தியரையும் சென்றடைவதை உறுதி செய்யும்.

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் 2022-ம் ஆண்டு அக்டோபர் 30-ந்தேதி வரையில், சுப்ரீம் கோர்ட்டு 3 லட்சத்து 37 ஆயிரம் வழக்குகளை காணொலிக்காட்சி வழியாக விசாரித்தது.

கட்டமைப்பு புதுப்பிப்பு

நாங்கள் காணொலிக்காட்சி கட்டமைப்பை புதுப்பித்துள்ளோம். நாட்டின் எந்த இடத்தில் இருந்தும் வழக்குதாரர்கள், எதிர்வழக்குதாரர்கள் என அனைவரும் கோர்ட்டு நடவடிக்கைகளில் இணைவதற்கு வசதியாக அதிநவீன கலப்பு முறை விசாரணைக்கான தொழில்நுட்ப கட்டமைப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story