'நான் காங்கிரசுக்கு வாக்களித்தேன் எனென்றால்...' - மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏ.

மாநிலங்களவை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. காங்கிரசுக்கு வாக்களித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் காலியாக உள்ள 4 மக்களவை இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த 4 இடங்களுக்கு பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனாதா தளம் உள்பட 6 கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், இன்று நடந்த வாக்குப்பதிவின் போது எம்.எல்.ஏ. ஒருவர் தனது சொந்த கட்சிக்கு பதில் மாற்று கட்சிக்கு வாக்களித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலார் தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாஸ் கவுடா. இவர், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு பதிலாக காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார். இந்த சம்பவம் ஜேடிஎஸ் (மதசார்பற்ற ஜனதா தளம்) கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் கட்சி மாறி காங்கிரசுக்கு வாக்களித்தது தொடர்பாக பேசிய ஜேடிஎஸ் எம்.எல்.ஏ. ஸ்ரீனிவாஸ் கவுடா, நான் காங்கிரசுக்கு வாக்களித்தேன்... ஏனென்றால் எனக்கு காங்கிரஸ் பிடிக்கும். எனது எதிர்கால அரசியல் காங்கிரசுடன் தான். நான் காங்கிரசில் மந்திரியாக இருந்துள்ளேன்' என்றார்.
அதேபோல், மதசார்பற்ற ஜனதா தளத்தின் மற்றொரு எம்.எல்.ஏ.வான எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸ் வாக்குச்சீட்டில் யாருக்கு வாக்களிக்கிறோம் என்ற இடத்தில் எதையும் பூர்த்தி செய்யாமல் வெற்று விண்ணப்பத்தை வாக்குப்பெட்டியில் போட்டுள்ளார். இதனால், அந்த எம்.எல்.ஏ.வின் வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.






