பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1.50 கோடி தங்கம் சிக்கியது


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.1.50 கோடி தங்கம் சிக்கியது
x
தினத்தந்தி 25 July 2023 6:45 PM GMT (Updated: 25 July 2023 6:46 PM GMT)

சிங்கப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வந்தரூ.1.50 கோடி தங்கம் சிக்கி உள்ளது. இதுதொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேவனஹள்ளி:-

பெங்களூரு விமான நிலையம்

பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி போதைப்பொருட்கள், தங்கம் உள்ளிட்டவை கடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றனர். இதுகுறித்து கிடைக்கும் ரகசிய தகவல்களின்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தலை தடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்பேரில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 பயணிகளின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ரூ.1.50 கோடி தங்கம்

இதையடுத்து அதிகாரிகள் அவர்களை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்கள் அணிந்திருந்த பெல்ட்டுகளில் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்து 2½ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.1½ கோடி என்று அதிகாரிகள் கூறினர். அவர்கள் 2 பேரையும் அதிகாரிகள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் 2 பயணிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story