போரில் உயிரிழக்கும் ரஷிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


போரில் உயிரிழக்கும் ரஷிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 14 Feb 2023 3:20 AM IST (Updated: 14 Feb 2023 7:06 AM IST)
t-max-icont-min-icon

போரில் உயிரிழக்கும் ரஷிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கீவ்,

உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா போரை தொடங்கியது. இந்த போரில் உக்ரைன் தரப்பில் அப்பாவி பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயுள்ளன. அதே வேளையில் ரஷிய ராணுவமும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு போரில் உயிரிழக்கும் ரஷிய வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து உக்ரைனில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உக்ரைன் போரில் ரஷிய வீரர்கள் உயிரிழப்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த மாதத்தில் அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 824 ரஷிய வீரர்கள் போரில் உயிரிழக்கின்றனர். கடந்த ஆண்டின் ஜூன், ஜூலை மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது 4 மடங்கு அதிகமாகும். அந்த சமயத்தில் நாள் ஒன்றுக்கு 172 ரஷிய வீரர்கள் இறந்தனர். அதே வேளையில் உக்ரைன் தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது" என கூறப்பட்டுள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை 1 லட்சத்து 37 ஆயிரத்து 780 ரஷிய வீரர்கள் இறந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறுவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story