இந்திய கச்சா எண்ணெய் சந்தையில் ரஷியாவின் ஆதிக்கம் 2023ல் தொடரும்- நிபுணர்கள்


இந்திய கச்சா எண்ணெய் சந்தையில் ரஷியாவின் ஆதிக்கம் 2023ல் தொடரும்- நிபுணர்கள்
x

இந்திய கச்சா எண்ணெய் சந்தையில் ரஷியாவின் ஆதிக்கம் 2023ல் தொடரும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

புதுடெல்லி

இந்தியா பல ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களுக்கு உரிய மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை சவூதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளிடம் அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது.

அதேபோல் ரஷியாவிடமும் இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து அந்த நாட்டின் மீது நேட்டோ நாடுகள், ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடை விதித்தது.

அதேபோல் அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்று அதன் நட்பு நாடுகள் பல, ரஷியாவிடம் வர்த்தக தொடர்பை முறித்துக்கொண்டன. ஆனால், அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியா, ரஷியாவிடமும் பல ஆண்டுகளாக நட்புறவை தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவின் கருத்தை பொருட்படுத்தாமல் இந்தியா ரஷியாவிடம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.

அதிலும் குறிப்பாக கடந்த ஓராண்டாக ரஷியாவிடம் முன்பை விட அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. எந்த அளவிற்கு என்றால் இதுவரை இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்த ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளை காட்டிலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகளவில் செய்யத் தொடங்கியது.

கடந்த ஆண்டும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் நாடுகளின் வரிசையில் ரஷியாவே முதலிடம் வகித்தது. 2022 டிசம்பர் மாதத்திலும் இந்த நிலையே நீடித்து வந்தது. தற்போது தொடங்கி இருக்கும் 2023 ஆம் ஆண்டிலும் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ரஷியாவே முன்னிலை வகிக்கும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளார்கள்.

இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களிலும் இந்த நிலைதான் தொடரும் என்று அவர்கள் கணித்து இருக்கிறார்கள். இந்தியா உலகளவில் மிக வேகமாக வளரும் நாடாக பார்க்கப்படுகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடான இந்தியா, எரிபொருள் உட்பட பல பொருட்களை பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.

இதன் காரணமாக பல உலக நாடுகள், பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவில் வருவாய் ஈட்டி வருகின்றன. குறிப்பாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலம் சவூதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகள் பல ஆயிரம் கோடி டாலர் மதிப்பில் வருமானம் ஈட்டி வந்தன. எனவே இந்தியாவுடனான வர்த்தக உறவை மேம்படுத்திக்கொள்ளவும், ஏற்படுத்தவும் பல நாடுகள் முயன்று வருகின்றனர்.

என்னதான் கச்சா எண்ணை வாங்கினாலும் நடந்துகொண்டிருக்கும் உக்ரைன் போரில் "மிக ஆழமான" கவலையை வெளிப்படுத்திய இந்தியா அமைதியின் பக்கம் இருப்பதாக கூறியது. மேலும் தொடக்கத்தில் இருந்தே இந்தியா பேச்சுவார்த்தைக்கு முயற்சிப்பதாகவும் கூறி வருகிறது.


Next Story