அசோக் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் இன்று ஒருநாள் உண்ணாவிரதம்..!
அசோக் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நத்துகிறார்.
ஜெய்ப்பூர்,
முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிற ராஜஸ்தான் மாநிலத்தில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இங்கு முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், கட்சியின் மூத்த தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக உள்ளது.
இவர்களிடையே அவ்வப்போது மோதல் எழுவதும், அதில் மேலிடம் தலையிட்டு சமரசம் செய்வதும் தொடர்கதையாய் நீளுகிறது. ஆனாலும் மோதல் போக்கு நீறுபூத்த நெருப்பாக எப்போதுமே கனன்று கொண்டிருக்கிறது. தற்போதும் அந்த மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது.
குறிப்பாக தற்போதைய அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அசோக் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.
இந்த நிலையில், ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க. அரசின் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சச்சின் பைலட் ஜெய்ப்பூரில் ஷாகீத் ஸ்மாரக்கில் இன்று (செவ்வாய்கிழமை) ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். சச்சின் பைலட் கோரிக்கைக்கு, அசோக் கெலாட் மந்திரிசபையில் உணவுத் துறை மந்திரி பிரதாப் சிங் காச்சாரியாவாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது அசோக் கெலாட் அரசுக்கு புதிய தலைவலியாக மாறி உள்ளது.
இது தொடர்பாக சச்சின் பைலட் கூறுகையில்,
"முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா அரசின் ஊழல் தொடர்பாக தற்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்துவோம் என்று வாக்குறுதி அளித்தோம்.
தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்கள்தான் உள்ளன. ஏதோ சதி இருப்பதாக எதிரிகள் மாயையை பரப்பக்கூடும். எனவே இதில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நமது வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் இடையே வித்தியாசம் இல்லை என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் உணர்வார்கள்" என்று கூறினார்.