கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தை பத்திரமாக மீட்பு
பெல்தங்கடி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்
மங்களூரு: பெல்தங்கடி அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.
மின்வேலியில் சிக்கி...
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் நவரா, சுல்கேரி உள்ளிட்ட பல கிராமங்கள் வனப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தாக்குவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
மேலும், இரை தேடி கிராமத்திற்குள் வரும் சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் பாதுகாப்பிற்கு அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கியும், கிணறுக்குள் தவறி விழுந்தும் இறந்து விடுகின்றன. அவற்றை தடுக்க வனத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். எனினும், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்துவிடுகின்றன.
இந்த நிலையில் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா நவரா கிராமத்தை சேர்ந்தவர் வசந்த கோட்டியான். விவசாயி. இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் தோட்டம் உள்ளது. அவர் நேற்று காலையில் தோட்டத்திற்கு சென்றார். அப்போது தோட்டத்தில் உள்ள கிணற்றில் சிறுத்தை ஒன்று தத்தளித்ததை கண்டார். உடனே அவர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
உயிருடன் மீட்பு
அந்த தகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர், கிணற்றில் விழுந்த சிறுத்தையை நீண்ட நேரம் போராடி வலை மூலம் பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர், பிடிபட்ட சிறுத்தையை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று இந்த பகுதியில் அட்டகாசம் செய்ததாக கூறப்பட்டது. பிடிப்பட்ட சிறுத்தை ஊருக்குள் புகுந்து தெரு நாய்கள், கோழி ஆகியவற்றை வேட்டையாட வந்தபோது கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்கும் என கூறினர்