தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ்-அகிலேஷ் யாதவ் திடீர் சந்திப்பு!


தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ்-அகிலேஷ் யாதவ் திடீர் சந்திப்பு!
x

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ், இன்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இருவரும் நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

தேசிய அளவிலான அரசியல் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா முதல் மந்திரி கே சந்திரசேகர் ராவ் ஒரு வார பயணமாக டெல்லி சென்றுள்ளார்.

டெல்லி சென்றுள்ள அவர், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்திக்கிறார். மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்தின் போது உயிர் தியாகம் செய்த 600 விவசாயிகளின் குடும்பங்களை ராவ் சந்திக்கிறார்.

அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3 லட்சம் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அவருடன் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியை சேர்ந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.


Next Story