சனாதன பேச்சு விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டம்
சனாதன பேச்சு விவகாரம் தொடர்பாக இந்துக்களிடம் தமிழக அமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிக்கமகளூருவில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கமகளூரு-
சனாதன பேச்சு விவகாரம் தொடர்பாக இந்துக்களிடம் தமிழக அமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று சிக்கமகளூருவில் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சனாதனம் குறித்து பேச்சு
சனாதனம் தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக இந்து அமைப்பினரும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
நேற்று காலையில் சிக்கமகளூரு டவுனில் உள்ள ஆசாத் பூங்காவில் பஜ்ரங்தள, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் திரண்டனர். அவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் உதயநிதி ஸ்டாலின் உருவபொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தி எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தின்போது அவர்கள் உதயநிதி ஸ்டாலின் இந்துக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.
பரபரப்பு
மேலும் உதயநிதி ஸ்டாலின் பொதுமன்னிப்பு கேட்கவில்லை என்றால் தேசிய அளவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.