சந்தேஷ்காளி சம்பவங்கள்; 10 பேர் கொண்ட குழு விசாரிக்கும்: டி.ஜி.பி. பேட்டி


சந்தேஷ்காளி சம்பவங்கள்; 10 பேர் கொண்ட குழு விசாரிக்கும்:  டி.ஜி.பி. பேட்டி
x
தினத்தந்தி 17 Feb 2024 6:29 PM GMT (Updated: 17 Feb 2024 6:53 PM GMT)

நிலைமையை பற்றி மறுஆய்வு செய்து, ஓரிரு நாட்களில் 144 உத்தரவை நாங்கள் நீக்குவோம் என கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், சந்தேஷ்காளி பகுதியில் பெண்கள் சிலர் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷாஜகான் ஷேக் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் பெண்களுக்கு எதிராக அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிராக, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் சந்தேஷ்காளி சம்பவங்கள் பற்றி விசாரிக்க 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது என டி.ஜி.பி. ராஜீவ் குமார் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் இன்று (சனிக்கிழமை) கூறும்போது, இந்த விசாரணை குழுவில், டி.ஐ.ஜி. அந்தஸ்திலான 2 பெண் அதிகாரிகள் உள்பட 10 உறுப்பினர்கள் இடம் பெற்று உள்ளனர்.

இந்த வழக்கில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷிபு ஹஜிரா உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் நில அபகரிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு உள்ளன. வகுப்புவாத குற்றச்சாட்டுகளும் கூறப்படுகின்றன. இதனால், கலவரம் பரவி விடாமல் இருப்பதற்காக 144 தடையுத்தரவும் இந்த பகுதியில் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பெண் ஒருவர் மாஜிஸ்திரேட் முன் ஆஜராகி பலாத்கார் புகார் அளித்திருக்கிறார் என கூறப்படுகிறது.

இதுபற்றி டி.ஜி.பி. ராஜீவ் குமார் கூறும்போது, நிலைமையை பற்றி மறுஆய்வு செய்து, ஓரிரு நாட்களில் 144 உத்தரவை நாங்கள் நீக்குவோம். இயல்பு நிலை மீண்டும் திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், ஒரேயொரு பெண் மாஜிஸ்திரேட் முன் புகார் அளித்திருக்கிறார். இதனை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். குற்றவாளிகள் அனைவர் மீதும், அவர்கள் யாராக இருப்பினும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறினார்.

எனினும், ஆளும் கட்சிக்கு ஆதரவாக மேற்கு வங்காள போலீசார் செயல்படுகின்றனர் என பா.ஜ.க. குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளது. இதனால், அந்த பகுதியில் அரசியல் ரீதியிலான பதற்றங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. தொடர்ந்து, பா.ஜ.க.வினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story