பணமோசடி வழக்கு; சஞ்சய் ராவத் ஒருபோதும் ஊழலில் ஈடுபடமாட்டார்: சுனில் ராவத் பேட்டி


பணமோசடி வழக்கு; சஞ்சய் ராவத் ஒருபோதும் ஊழலில் ஈடுபடமாட்டார்:  சுனில் ராவத் பேட்டி
x

சஞ்சய் ராவத் ஒருபோதும் எந்த ஊழலிலும் ஈடுபடமாட்டார் என்றும் பா.ஜ.க. அவரை பார்த்து பயந்து விட்டது என்றும் அவரது சகோதரர் சுனில் ராவத் கூறியுள்ளார்.



புனே,



மராட்டியத்தில் மும்பை கோரேகாவ் பத்ரா சால் குடிசை சீரமைப்பு மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரவின் ராவத் கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். இதில், ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு நெருக்கமானவராக கருதப்படும் அவர், தற்போது சிறையில் உள்ளார். பிரவின் ராவத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், பத்ரா சால் மோசடியில் சஞ்சய் ராவத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதன்படி, பிரவின் ராவத்திற்கு மோசடி மூலம் கிடைத்த ரூ.100 கோடியில் ரூ.83 லட்சம் பணம் சஞ்சய் ராவத் குடும்பத்தினருக்கு அவர் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் மோசடி பணத்தில் சஞ்சய் ராவத்தின் மனைவி உள்ளிட்ட சிலரின் பெயரில் அலிபாக்கில் நிலம் வாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவற்றில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சஞ்சய் ராவத்திற்கு சம்மன் அனுப்பியது. அதன்பேரில் கடந்த மாதம் 1-ந் தேதி சுமார் 10 மணி நேரம் சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

அதன்பிறகு விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் நாடாளுமன்ற கூட்ட தொடரில் பங்கேற்க வேண்டியுள்ளது என கூறி அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்தநிலையில் கடந்த ஜூலை 31ந்தேதி காலை மும்பை பாண்டுப்பில் உள்ள சஞ்சய் ராவத் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சுமார் 10 மணி நேர சோதனையில் ரூ.11½ லட்சம் ரொக்கம், சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதன் பிறகு சஞ்சய் ராவத் விசாரணைக்காக தென்மும்பையில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் டெல்லியில் இருந்து வந்த அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என கூறப்பட்டது.

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 1-ந் தேதி அதிகாலை 12.30 மணியளவில் அவரை அதிரடியாக கைது செய்தனர். சிறப்பு கோர்ட்டு அவரை 4-ந் தேதி வரை விசாரிக்க அனுமதி வழங்கியது.

இதனை தொடர்ந்து அவர் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு வரும் 8ந்தேதி வரை அமலாக்க துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதன்பின், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தின் சகோதரர் சுனில் ராவத் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நீதி துறை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. சஞ்சய் ராவத்துக்கு வருகிற 8ந்தேதி வரை அமலாக்க துறை காவல் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. பாலாசாகேப் தாக்கரேவின் உண்மையான சிவசேனா தொண்டர் சஞ்சய் ராவத். அவர் ஒருபோதும் எந்த ஊழலிலும் ஈடுபடமாட்டார். பா.ஜ.க. அவரை பார்த்து பயந்து விட்டது என கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ராவத்தின் வழக்கறிஞர் மனோஜ் மொகிதே கூறும்போது, அரசியல் ரீதியிலான இந்த வழக்கு நீண்டகாலம் இழுத்து கொண்டே செல்கிறது. இதில் ஒரு குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்பட்டு விட்டது என கூறியுள்ளார்.


Next Story