மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தீபங்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க பரிந்துரை
மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தீபங்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கான சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தீபங்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்வது என முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்த தகவல் சுப்ரீம் கோர்ட்டின் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தீபங்கர் தத்தா, கொல்கத்தா ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சலில் குமார் தத்தாவின் மகன், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி அமித்தவ ராயின் நெருங்கிய உறவினரும் ஆவார்.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்து பட்டம் பெற்று, 1989-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து கொண்டார். மேற்கு வங்காள அரசு வக்கீலாகவும், மத்திய அரசின் வக்கீலாகவும், கொல்கத்தா சட்ட பல்கலைக்கழக கல்லூரியில் அரசியல் சட்ட கவுரவ விரிவுரையாளராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மொத்த பணி இடங்கள் 34, ஆனால் தற்போது 29 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.