கொலை முயற்சி வழக்கு: மத்திய மந்திரி மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தடை


கொலை முயற்சி வழக்கு: மத்திய மந்திரி மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தடை
x

மத்திய மந்திரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி,

மத்திய உள்துறை இணைமந்திரி நிதிஷ் பிரமனிக். மேற்குவங்காளத்தை சேர்ந்த இவர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து 2019ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அதன் பின்னர் அம்மாநிலத்தின் கூச் பெஹார் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே, 2018ம் ஆண்டு கூச் பெஹார் மாவட்டம் தின்ஹடா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவம் நிதிஷ் பிரமனிக் வன்முறையை தூண்டியதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தின்ஹடா பகுதி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டது.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி கொல்கத்தாவில் உள்ள ஜல்பைஹுரி கோர்ட்டில் நிதிஷ் பிரமனிக் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஜல்பைஹுரி கோர்ட்டு மத்திய மந்திரி பிரமனிக்கிற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இந்நிலையில், கொலை முயற்சி வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த ஜல்பைஹுரி கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து நிதிஷ் பிரமனிக் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கொலை முயற்சி வழக்கில் நிதிஷ் பிரமனிக் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்முன் கோர்ட்டில் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.


Next Story